'லிப்ஸ்டிக்' எடுத்து செல்ல ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பை வாங்கிய இளம்பெண் - வீடியோ வைரல்
- ஒரு தாயும், அவரது மகளும் கைப்பை வாங்குவதற்காக ஒரு கடைக்கு செல்கிறார்கள்.
- சில பயனர்கள், தனது ஆடம்பரத்தை காட்டுவதற்காக இவ்வளவு பெரிய தொகைக்கு கைப்பை வாங்குகிறார்கள் என பதிவிட்டனர்.
மும்பை:
சில பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது தாங்கள் கொண்டு செல்லும் கைப்பைகள் கூட தங்களின் ஆடையின் நிறத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். சில பெண்கள் இதற்காக அதிக விலை கொண்ட மற்றும் பெரிய நிறுவனங்களின் கைப்பைகளையும் விரும்பி வாங்குகிறார்கள்.
அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஒரு இளம்பெண் லிப்ஸ்டிக் எடுத்து செல்வதற்காக ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பையை வாங்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், ஒரு தாயும், அவரது மகளும் கைப்பை வாங்குவதற்காக ஒரு கடைக்கு செல்கிறார்கள். அங்கு கடை உரிமையாளர் அவர்களிடம் பிரபல ஹெர்ம்ஸ் கெல்லி நிறுவனத்தின் வெள்ளை, கருப்பு, பழுப்பு மற்றும் நீல நிறங்களில் பல பைகளை காட்டுகிறார். ஒவ்வொன்றையும் பற்றி தாயும், மகளும் விளக்கமாக கேட்கிறார்கள். அப்போது அங்கிருக்கும் ஒரு பெரிய பையை தேர்வு செய்ய தனது மகளிடம் தாய் பரிந்துரைக்கிறார்.
அப்போது அவரது மகள் ரூ.27 லட்சம் மதிப்புள்ள சிறிய அளவிலான ஒரு பையை தேர்வு செய்து தனது விருப்பத்தை தாயிடம் வெளிப்படுத்துகிறார். மேலும் வரவிருக்கும் தேனிலவின் போது தனது லிப்ஸ்டிக்கை எடுத்து செல்வதற்கு இந்த பை கச்சிதமாக இருப்பதாகவும், ஸ்டைலாக உள்ளதாகவும் அவர் கூறியதோடு வெள்ளை நிற பையை அவர் தேர்ந்தெடுப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
சில பயனர்கள், தனது ஆடம்பரத்தை காட்டுவதற்காக இவ்வளவு பெரிய தொகைக்கு கைப்பை வாங்குகிறார்கள் என பதிவிட்டனர். ஒரு பயனர், நான் பல ஆண்டுகளாக ஹெர்ம்ஸ் பர்கினை பார்த்து வருகிறேன். ஆனால் இது எனது பட்ஜெட்டில் இல்லை என பதிவிட்டார்.