மகா கும்பமேளா: 30 பேர் உயிரிழந்த விவகாரம் - வி.வி.ஐ.பி.-களுக்கு சிறப்பு அனுமதி ரத்து, வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
- கும்பமேளா பகுதியில் அனைத்து வாகனங்கள் நுழைய தடை.
- கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில்கள், பஸ்கள் இயக்க ஏற்பாடு.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேசம் மாநிலம் பிராயக்ராஜில் நடந்து வரும் கும்பமேளா நெரிசலில் சிக்கி நேற்று 30 பேர் பரிதாபமாக இறந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கவும் முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
அதன்படி கும்பமேளா பகுதியில் அனைத்து வாகனங்களும் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் பிப்ரவரி 4-ந் தேதி வரை மாவட்ட எல்லையிலேயே நிறுத்தப் பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வி.வி.ஐ.பி. பாஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா பகுதியில் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்யவும், தேவையற்ற நிறுத்தங்களை தவிர்க்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தெருவோர வியாபாரிகளை காலி இடங்களுக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கும்பமேளா பகுதியில் ரோந்து பணியை அதிகரிக்கவும், அயோத்தி-பிரயாக்ராஜ், கான்பூர்-பிரயாக்ராஜ், பதேபூர்-பிரயாக்ராஜ், லக்னோ-பிரதாப்கர்-பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசி-பிரயாக்ராஜ் போன்ற வழித்தடங்களில் போக்குவரத்து தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்யவும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முறையாக உணவும், குடிநீர் வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கும்பமேளா பகுதியில் சரியான வாகன நிறுத்து மிடத்தை உறுதி செய்யவும் தடுப்புகளை முறையாக பயன்படுத்தவும் அதிகாரி களுக்கு முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
புனித நீராடி ஊர் திரும்பும் பக்தர்களுக்கு கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் மற்றும் கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 3-ந்தேதி வசந்த பஞ்சமியை முன்னிட்டு அமிர்த ஸ்னான் (அரச குளியல்) நடைபெற உள்ளதால் (வியாழக்கிழமை) கும்பமேளாவின் ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் இயக்குநருக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார்.