இந்தியா

கும்பமேளா நிர்வாக பணிகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

Published On 2025-01-29 15:03 IST   |   Update On 2025-01-29 15:03:00 IST
  • மௌனி அமாவாசை தினமான இன்று கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
  • இதையடுத்து, பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

லக்னோ:

மௌனி அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமாஜ்வாடி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ், கும்பமேளாவில் உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

மகா கும்பமேளாவிற்கு வந்திருக்கும் துறவிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கும்பமேளா நிர்வாக அமைப்பின் மீது நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட, கும்பமேளா நிர்வாகத்தை உ.பி அரசிடம் ஒப்படைக்காமல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

உலகத்தரம் வாய்ந்த ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறப்படும் உண்மைகள் தற்போது அனைவர் முன்னிலையில் வெளிவந்துள்ளன. இதுபற்றி பொய்ப் பிரசாரம் செய்பவர்கள், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

மகா கும்பாபிஷேகத்தின் தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட விபத்தில் பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. காயம் அடைந்தவர்களை ஆதரிப்பதற்கும், மேலும் குழப்பத்தைத் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச அரசை கேட்டுக் கொள்கிறேன்.

படுகாயம் அடைந்தவர்களைக் கொண்டு செல்வதற்கு ஏர் ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட வேண்டும். இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உடல்களை அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பித் தருவதற்கு விரைவான ஏற்பாடுகள் செய்யவேண்டும்.

இந்த இக்கட்டான நேரத்தில் பக்தர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்கவேண்டும். பக்தர்களின் எதிர்கால ஏற்பாடுகளை மேம்படுத்த இந்தச் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளும்படி மாநில அரசை கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News