500 தொலைபேசி அழைப்புகள்.. குணால் கம்ராவுக்கு கொலை மிரட்டல்
- ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
- மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.
குணால் கம்ரா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக குணால் கம்ராவுக்கு சிவசேனா கட்சியை சேர்ந்த பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், குணால் கம்ராவுக்கு தொலைபேசி மூலம் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை குணால் கம்ராவை கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கும் அழைப்புகள் என்று கூறப்படுகிறது. குணால் கம்ராவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோர முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் இதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குணால் கம்ரா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தற்போது மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இருக்கும் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை முன்பொரு காலத்தில் துரோகி என்று கூறி வந்ததாக குணால் கம்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.