மனைவியுடன் தொடர்பு - தன் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரை உயிருடன் புதைத்த உரிமையாளர்
- விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
- அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அரியானா மாநிலத்தில் வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரை உயிருடன் புதைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் தன் மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததை அடுத்து வீட்டு உரிமையாளர் இப்படி செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
அரியானா மாநிலம் ரோதக்கில் உள்ள பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம் அருகே வசித்து வருபவர் ஹர்தீப். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். இந்த வீட்டில் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்தீப் என்பவர் வாடகைக்கு குடியேறினார். அவர் அந்த பகுதியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
வாடகைக்கு குடியேறிய அவர் ஹர்தீப் மனைவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் மனைவியுடன் யோகா ஆசிரியர் ஜக்தீப் தனிமையில் சந்தித்ததை ஹர்தீப் கண்டுபிடித்தார். தன்னுடைய வீட்டில் வாடகைக்கு வந்தவர் மனைவியுடன் கள்ளக்காதலை ஏற்படுத்திக் கொண்டு தகாத முறையில் நடந்து கொண்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, யோகா ஆசிரியர் ஜக்தீப்பை தீர்த்தக்கட்ட ஹர்தீப் முடிவு செய்தார். இந்த கொலையில் தான் சிக்கிவிடக்கூடாது என்பதிலும் மிக கவனமாக இருக்க நினைத்துள்ளார். இதற்காக தனது நண்பருடன் தீவிர ஆலோசனை நடத்தி சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் திட்டம் தீட்டினார்.
அதன்படி ஹர்தீப் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து கொண்டு யோகா ஆசிரியர் ஜக்தீப்பை உயிரோடு குழி தோண்டி புதைக்க முடிவு செய்தார். அதற்காக விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப் போவதாக கூறி பணியாளர்களை அழைத்து வந்து 7 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி தயார் நிலையில் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தேதி ஜக்தீப் வேலைக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஹர்தீப் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து ஜக்தீப்பை கடத்திச் சென்று, ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டிருந்த 7 அடி பள்ளத்தில் தூக்கி வீசினர். தொடர்ந்து அவரை உயிரோடு புதைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் ஹர்தீப் எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார். இந்த நிலையில் யோகா ஆசிரியர் ஜக்தீப்பின் உறவினர்கள் அவரை காணவில்லை என கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி சிவாஜி காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதில் எந்த துப்பும் துலங்கவில்லை. இதனை தொடர்ந்து அவருடைய செல்போன் அழைப்பு பதிவுகளை வைத்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.
சந்தேகத்தின் பேரில் ஹர்தீப்பை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் யோகா ஆசிரியரை கை கால்களை கட்டி உயிரோடு புதைத்து கொலை செய்ததாக தெரிவித்தார்.
இந்த அதிர்ச்சி தகவலை அறிந்த போலீசார் நேற்று முன்தினம் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஹர்தீப் மற்றும் அவருடைய நண்பர் தரம் பால் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவித்தனர்.