தமிழ்நாட்டில் மட்டும் தான் கமலா ஹாரிஸ்.. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மாஸ் காட்டிய டிரம்ப்
- அமெரிக்க அதிபர் தேர்தலில் 295 எலக்டோரல் வாக்குகளை டிரம்ப் பெற்றார்.
- கமலா ஹாரிஸ் 226 எலக்டோரல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 295 எலக்டோரல் வாக்குகளை டிரம்ப் பெற்றார். கமலா ஹாரிஸ் 226 எலக்டோரல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
இந்நிலையில் இந்தியாவில் கூகுளில் பலரும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்பை தேடி வந்தனர்.
இதில் சுவாரசியம் என்னவென்றால், அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் டொனால்டு டிரம்பை அதிகமானோர் கூகுளில் தேடியுள்ளனர்.
கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் தமிழ்நாட்டில் அவரை அதிகபேர் தேடியுள்ளனர்.
கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தது வருத்தம் அளிப்பதாக அவரது பூர்விக கிராமமான திருவாரூர் மாவட்டத்தை அடுத்த துளசேந்திரபுர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று கூறி அவரது பூர்விக கிராமத்தில் மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.