இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா: இது முதல் முறையும் அல்ல... கடைசியும் அல்ல... சசி தரூர்
- பொதுமக்களால் இரண்டு அல்லது மூன்று விசயங்கள் மறக்கப்பட்டுள்ளன.
- பைடன் நிர்வாகத்தால் கடந்த செப்டம்பர் மாதம், 1,100 இந்தியர்கள் திருப்பி அனுப்பிவிடப்பட்டனர்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் ராணுவ விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் ஆவணமின்றி இருப்பதாக கண்டறியப்பட்டது. அவர்களை வெளியேற்ற அமெரிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் முதற்கட்டமாக 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த விமானம் இன்று மதியம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானத்தில் வந்தவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது இது முதல் முறை அல்ல என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது:-
பொதுமக்களால் இரண்டு அல்லது மூன்று விசயங்கள் மறக்கப்பட்டுள்ளன. இது முதல் நாடு கடத்தல் சம்பவம் கிடையாது. அதேபோல் கடைசி சம்பவமும் கிடையாது. டொனால்டு டிரம்ப் பதவிக்கு வருவதற்கு முன்னதாக கூட, பைடன் நிர்வாகத்தால் கடந்த செப்டம்பர் மாதம், சட்டவிரோதமாக குடியேறியதாக 1,100 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பிவிடப்பட்டனர்.
7,25,000 இந்தியவர்கள் ஆவணங்களின்றி அமெரிக்காவில் உள்ளனர். அவர்கள் நாடுகடத்த தகுதியானவர்கள் என அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களில் மெக்சிகோ மற்றும் கனடா எல்லைகளில் இருந்து சுமார் 2 லட்சம் இந்தியர்களை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.