மாணவனை திருமணம் செய்ததாக பரவிய வீடியோ.. பேராசிரியை ராஜினாமா செய்ய முடிவு
- வகுப்பறையில் பேராசிரியை மாணவனை திருமணம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ வைரலானது.
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பல்கலைக்கழக பேராசிரியை ஒருவர் முதலாம் ஆண்டு மாணவனை வகுப்பறையில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் வகுப்பறைக்குள் பேராசிரியை மற்றும் மாணவன் என இருவரும் மாலை மாற்றிக் கொண்டு சிந்தூர் பூசிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதோடு திருமணத்திற்கு சம்மதம் கூறி இருவரும் எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்ட கடிதம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடியோ பரவியதை தொடர்ந்து, பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், பேராசிரியை விடுப்பில் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
அப்போது இந்த விவகாரம் குறித்து பேசிய பேராசிரியை, "இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு திட்டத்தின் ஒரு பகுதி. ஃபிரெஷர்ஸ் பார்ட்டிக்காக நாங்கள் திட்டமிட்டு நடத்திய நாடகம் இது. எனக்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வீடியோ வேண்டுமென்றே வைரலாக்கப்பட்டது. என் மீது அவதூறு செய்ய முயன்றவர்கள் மீது நான் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்," என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வகுப்பறையில் மாணவனை மணந்து கொண்டது போன்ற வீடியோ பரவியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பல்கலைக்கழகத்தில் பணியை தொடர முடியாத நிலை இருப்பதாக கூறி அந்த பேராசிரியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.