வாங்கிய கடன் ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ. 14,000 கோடி.. உயர்நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு!
- வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் கடந்த 2016 இல் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பியோடினார்.
- மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார், அவரை நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
வங்கிகளிடமிருந்து கடன் வசூல் கணக்குகளை கோரி விஜய் மல்லையா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் கடந்த 2016 இல் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பியோடினார். அவர் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கு ஈடாக அவரது சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன. இந்நிலையில் வங்கிகளிடமிருந்து கடன் வசூல் கணக்குகளைக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையில் மல்லையா சார்பாக மூத்த வழக்கறிஞர் சஜன் பூவய்யா நீதிமன்றத்தில் ஆஜரானார். மல்லையா ரூ.6203 கோடி திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அவரின் சொத்துக்களை விற்று ரூ.14,131 கோடியை வங்கி வசூலித்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
இருப்பினும் மக்களவையில் மல்லையாவை ஒரு பொருளாதார குற்றவாளி என கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடன் வசூல் அதிகாரி ரூ.10,200 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளதாகவும் மல்லையாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
எனவே, வசூலிக்கப்பட்ட கடன் தொகை குறித்த அறிக்கையை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மல்லையா தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மல்லையாவின் மனுவின் அடிப்படையில், நீதிபதி ஆர்.தேவதாஸ் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, வங்கிகள் மற்றும் கடன் வசூல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது லண்டனில் வசித்து வரும் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.