பாவங்களை போக்க புனித நீராடினாரா.. பிரதமர் மோடியை விமர்சித்த பிரகாஷ் ராஜ்
- பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
- மகா கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் நீராடியதாக போலியான படங்கள் பரப்பப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.
இந்த வரிசையில் இன்று தனி விமானம் மூலம் பிரயாக்ராஜ் சென்ற பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் நீராடியதை விமர்சிக்கும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "சுப்ரீம் தலைவர் புனித நீராடினார். இது அவர் செய்த பாவங்களுக்கான பிராய்சித்தமா?" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மகா கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் நீராடியதாக போலியான படங்கள் பரப்பப்பட்டது. அந்த பதிவுகளில் பிரகாஷ் ராஜ் தனது பாவங்களை போக்க புனித நீராடினார் என்று பதிவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.