இந்தியா

இந்துக்கள் அல்லாத 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் ஒழுங்கு நடவடிக்கை

Published On 2025-02-05 18:05 IST   |   Update On 2025-02-05 19:17:00 IST
  • ஏழுமலையான் போட்டோ அல்லது சிலை முன்பு இவர்கள் இந்து நம்பிக்கை மற்றும் பாராம்பரியத்தை பின்பற்றுவதாக உறுதி ஏற்றவர்கள்.
  • இந்து மத கண்காட்சிகள், திருவிழாக்கள், நிகழ்ச்சியின்போது இந்து மதம் அல்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு.

பதவி ஏற்றபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறி, இந்து அல்லாத மத நடவடிக்கைகளை பின்பற்றியதால் 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தான போர்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திருப்பதி உள்ளிட்ட எந்த கோவிலுடன் தொடர்பில்லாத பதவிகளுக்கு இடமாற்ற செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

வேலைக்கு சேர்ந்த இந்துக்கள் அல்லாத 18 ஊழியர்கள், இந்துக்களின் நம்பிக்கை பின்பற்றுவோம் என உறுதிமொழி ஏற்றிருந்தனர். தற்போது அந்த உறுதிமொழியை அவர்கள் பின்பற்றவில்லை. இதனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான போர்டின் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

கோவில்களின் ஆன்மீக புனிதத்தன்மை மற்றும் மத நடவடிக்கைகளைப் பாதுகாப்பது என்ற உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது இந்து மத கண்காட்சிகள், திருவிழாக்கள், நிகழ்ச்சியின்போது இந்து மதம் அல்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

ஏழுமலையான் போட்டோ அல்லது சிலை முன்பு இவர்கள் இந்து நம்பிக்கை மற்றும் பாராம்பரியத்தை பின்பற்றுவதாக உறுதி ஏற்றனர். இப்போது இவர்களின் செயல்பாடுகள் தேவஸ்தானங்களின் கவுரவத்தை இழிவுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

18 ஊழியர்களின் தற்போதைய பணியிடங்களைச் சரிபார்த்து, அவர்கள் திருமலையிலோ அல்லது வேறு எந்தக் கோவிலிலோ அல்லது மத நிகழ்ச்சி தொடர்பான பணியிலோ அல்லது பதவியிலோ பணியமர்த்தப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் பணியை தேவஸ்தான் போர்டின் இரண்டு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தேவஸ்தான போர்டு வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவில் இந்து நம்பிக்கை மற்றும் புனிதத்தின் அடையாளமாக இருப்பதை உறுதி செய்வேன் என்று தேவஸ்தான போர்டு தலைவர் பி.ஆர். நாயுடு முன்னதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளது என சந்திரபாபு நாயுடு ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News