இந்தியா

ஒருவேளை தொங்கு சட்டசபை நிலை ஏற்பட்டால் மறுதேர்தல்தான்... காங்கிரஸ் தலைவர்

Published On 2025-02-05 17:10 IST   |   Update On 2025-02-05 17:10:00 IST
  • டெல்லி மக்களுக்கு எந்த குழப்பமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
  • கடந்த 2 தேர்தல்களை போல் தனி மெஜாரிட்டி கிடைக்கும் வகையில் டெல்லி மக்கள் வாக்களிப்பார்கள்.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது தெரிந்துவிடும்.

இந்த நிலையில் ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால், ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா? என்று காங்கிரஸ் கட்சி தலைவர் பவன் கேராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பவன் கேரா பதில் அளித்து கூறியதாவது:-

கடந்த இரண்டு தேர்தல்களை போன்று டெல்லி மக்கள் தீர்க்கமான முடிவை கொடுக்கும் வகையில் வாக்களிப்பார்கள் என்பதால் தொங்கு சட்டசபை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது. டெல்லி மக்களுக்கு எந்த குழப்பமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி நிகழ்ந்தால் நமக்கு இன்னொரு தேர்தல் இருக்கும். ஆனால், இது நிகழும் என நான் நினைக்கவில்லை.

இவ்வாறு பவன்கேரா தெரிவித்தார்.

2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. ஆம் ஆத்மி 28 இடங்களையும், பாஜக 32 இடங்களையும் கைப்பற்றியது.

இரு கட்சிகளுக்கு ஆட்சியமைக்க போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபையுடன் ஆட்சி அமைக்க பாஜக விரும்பவில்லை. அதனால் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை.

இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் ஆதரவுடன் முதலமைச்சர் ஆனார். பின்னர் காங்கிரஸ் ஆதரவை திரும்பப் பெற்றது. இதனால் 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது ஆம் ஆத்மி 67 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2020 தேர்தலில் 62 இடங்களை பிடித்தது.

Tags:    

Similar News