இந்தியா
"மக்களின் சம்பளத்தை திருட வந்த நிர்மலா சீதாராமன்.." பாஜகவை கலாய்த்து மகா. காமெடியன் புது வீடியோ

"மக்களின் சம்பளத்தை திருட வந்த நிர்மலா சீதாராமன்.." பாஜகவை கலாய்த்து மகா. காமெடியன் புது வீடியோ

Published On 2025-03-26 18:27 IST   |   Update On 2025-03-26 18:27:00 IST
  • அனில் கபூரின் மிஸ்டர் இந்தியா படத்தில் வரும் ஹவாய் ஹவாய் பாடல் வரிகளை மாற்றியமைத்து பரோடி பாணியில் இந்த பாடல் அமைந்துள்ளது.
  • மக்களுக்கு சாப்பிட பாப்கார்ன் தர வந்திருக்கிறார், அவரை நிர்மலா தாய் என்று அழைக்கிறார்கள்.

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.

கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கும் சூழலில் குணால் கம்ரா மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராக குணால் கம்ரா 1 வாரம் அவகாசம் கேட்டிருந்தார்.

காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார் என்றும் ஆனால் தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரது கோரிக்கையை மும்பை போலீஸ் நிராகரித்துள்ளது. உடனே அவர் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையே சேனா ஆதரவாளர்கள் தனது ஸ்டூடியோவை அடித்து உடைக்கும் வீடியோவை பகிர்ந்து அவர்களை கிண்டல் செய்து மேலும் ஒரு நகைச்சுவை பாடலை வெளியிட்டார்.

இந்நிலையில் மத்திய மாநில பாஜக அரசின் சர்வாதிகார செயல்பாடுகள் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராம்மானை கிண்டலடித்து மேலும் ஒரு நகைச்சுவை பாடல் வீடியோவை குணால் கம்ரா வெளியிட்டுள்ளார்.

அனில் கபூரின் மிஸ்டர் இந்தியா படத்தில் வரும் ஹவாய் ஹவாய் பாடல் வரிகளை மாற்றியமைத்து பரோடி பாணியில் இந்த பாடல் அமைந்துள்ளது. "உங்கள் வரிப்பணம் வீணாக போகிறது" என்பது இந்த பாடலின் தலைப்பு. "அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், உடைந்துவிழும் பாலங்கள், இது சர்வாதிகாரம்" என்ற வரிகள் பாடலில் இடம்பெற்றுள்ளன.

மேலும் நிர்மலா சீதாராமன் குறித்த வரிகளில், "அவர் மக்களின் சம்பாத்தியத்தைக் கொள்ளையடிக்க வந்திருக்கிறார், சம்பளத்தைத் திருட வந்திருக்கிறார், நடுத்தர வர்க்கத்தை அடக்கி ஒடுக்க வந்திருக்கிறார், மக்களுக்கு சாப்பிட பாப்கார்ன் தர வந்திருக்கிறார், அவரை நிர்மலா தாய் என்று அழைக்கிறார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.

பாஜக அரசு பெருநிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரிச்சுமையையும் வழங்கி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

மேலும் கடந்த வருடம் பாப்கார்னுக்கு மூன்று விதமான வரியை விதித்து அதற்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் கேலிக்கு உள்ளானது. இவற்றை முன்வைத்து குணால் கம்ரா தனது பாடலில் அவரை விமர்சித்துள்ளார்.

Tags:    

Similar News