வீட்டை விற்பதில் தகராறு: மனைவியை கொன்று, வீட்டிலேயே ஒளிந்து கொண்ட கணவன்
- இவர்கள் டெல்லியில் வசிக்க, இவர்களது மகன் அயல்நாட்டில் வசிக்கிறார்
- பங்களாவின் சரக்கு அறையில் நிதின் ஒளிந்து கொண்டிருந்தார்
புது டெல்லியை சேர்ந்த உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர், ரேணு சின்ஹா. இவர் தனது கணவர் நிதின் நாத் சின்ஹாவுடன் டெல்லியின் நொய்டா பகுதியில் செக்டார் 30ல், அவர்களது சொந்த பங்களாவில் வசித்து வருகிறார். இவர்களது மகன் அயல்நாட்டில் வசிக்கிறார். ரேணுவிற்கு ஒரு சகோதரன் இருக்கிறார்.
நிதின் நாத் சின்ஹா, அவர்கள் வசித்து வரும் பங்களாவை விற்றுவிட விலை பேசியிருந்தார். அதற்கான முன்பணமும் வாங்கியிருந்தார். ஆனால், இந்த விற்பனையில் ரேணுவிற்கு சம்மதமில்லை. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இது விஷயமாக இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையாக மாறியது. அப்போது ஆத்திரத்தில் நிதின் நாத் சின்ஹா, ரேணுவை கொலை செய்தார். அவரது உடலை குளியலறையில் போட்டு விட்டு, காவல்துறைக்கு பயந்து, அந்த பங்களாவிலேயே உள்ள ஒரு சரக்குகளை வைக்கும் அறையில் ஒளிந்து கொண்டார்.
இரு தினங்களாக தனது சகோதரியை தொடர்பு கொண்ட முயற்சிக்கும் போது அவரது செல்போன் தொடர்ந்து அணைத்து வைக்கப்பட்டிருப்பதால் சந்தேகம் கொண்ட ரேணுவின் சகோதரன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, பங்களாவை சோதனையிட வந்த காவல்துறையினரின் தேடுதலில் ரேணுவின் உடல் குளியலறையில் கண்டெடுக்கப்பட்டது.
அவரது கணவரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்ட போது அவரது செல்போன் சமிக்ஞை கடைசியாக பங்களாவில் இருந்தே வந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து அவரை தேடும் வேட்டையில், அவர் அந்த பங்களாவில் சரக்கு அறையில் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.