இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் - மாயாவதி ஆதரவு, பினராயி விஜயன் எதிர்ப்பு

Published On 2024-09-18 14:33 GMT   |   Update On 2024-09-18 14:33 GMT
  • மோடி தலைமயிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • கடந்த மக்களவை தேர்தலில் சந்தித்த பின்னடைவில் இருந்து பாஜக எதையும் கற்றுக்கொள்ளவில்லை.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தனது ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே அமல் படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்தது.

இந்நிலையில் இன்று மோடி தலைமயிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தி, மத்திய அரசுக்கு முழு அதிகாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட முறைமுக செயல்திட்டமாகும். கடந்த மக்களவை தேர்தலில் சந்தித்த பின்னடைவில் இருந்து பாஜக எதையும் கற்றுக்கொள்ளவில்லை

இந்தியாவின் தேர்தல் அரசியலை சர்வாதிகார முறையை நோக்கி நகர்த்துவதற்கு சங்பரிவார் ஒரு இரகசிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற முழக்கம் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான அம்சங்கள் உள்ளது. இந்த வேறுபாடுகளைப் புறக்கணித்து, மாநிலங்களில் எழும் அரசியல் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாமல் எந்திரத்தனமாகத் தேர்தலை நடத்துவது கட்டாய மத்திய ஆட்சியை விளைவிக்கும். இறுதியில் அது ஜனநாயகத்தை அழித்துவிடும்.

இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையும், இந்தியா என்ற எண்ணத்தையும் சீர்குலைக்கும் சங்பரிவார்களின் முயற்சிகளுக்கு எதிராக நாட்டின் ஜனநாயக சமூகம் எழுந்து நிற்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் ஹைதராபாத் எம்.பி. ஒவைசி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News