ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா - மக்களவையில் இன்று தாக்கல் ஆகும் வாய்ப்புகள் குறைவு?
- விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இடம்பெறவில்லை.
பாாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி இம்மாதம் 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் வன்முறை குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
இந்த வரிசையில், கடந்த 12-ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி இந்த மசோதா இன்று (டிசம்பர் 16) தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படாது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த வார இறுதியில் மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவையின் இன்றைய அலுவல் அட்டவணையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இடம்பெறவில்லை. எனினும், மக்களவை சபாநாயகர் அனுமதியுடன் கடைசி நேரத்தில் துணை பட்டியல் மூலம் இந்த மசோதாவை கொண்டுவரவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.