பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சந்திப்பு
- தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து, இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி பேசியதாக தெரிகிறது.
- அனுராகுமார திசநாயகா அதிபர் ஆன பிறகு, இலங்கை மீண்டும் இந்தியாவின் நட்பை விரும்புகிறது.
புதுடெல்லி:
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இடதுசாரி கட்சியான 'தேசிய மக்கள் சக்தி' கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயகா வெற்றி பெற்று இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர், அதிபர் திசநாயகாவை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்று இலங்கை அதிபர் அனுராகுமார திசநாயகா தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். அரசு முறை பயணமாக வந்துள்ள அவர் இந்தியாவில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
இலங்கை அதிபர் அனுராகுமார திசநாயகா நேற்று மாலை டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய மந்திரி எல்.முருகன் விமான நிலையத்தில் திசநாயகாவை வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோரை திசநாயகா தனித்தனியாக சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து அதிபர் திசநாயகா கூறுகையில், 'இந்தியா-இலங்கை பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். பொருளாதாரம், முதலீடு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்னேற்றம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவை மேம்படுத்துவது தொடர்பாக இந்த சந்திப்பு அமைந்தது' என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகாவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் திசநாயகா சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் திசநாயகாவும் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் விரிவான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து, இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி பேசியதாக தெரிகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து இந்தியாவுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளையும் அவர் இலங்கை அதிபரிடம் தெரிவித்ததாக என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்ச்சியில் அதிபர் திசநாயகா பங்கேற்கிறார். பின்னர் அவர் பீகாரில் உள்ள புத்த கயாவுக்கு செல்ல உள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இலங்கை சென்ற மத்திய மந்திரி ஜெய்சங்கரிடம் பேசிய திசநாயகா, இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைக்கும் தங்களுடைய நிலப்பகுதியை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று உறுதி அளித்திருந்தார். மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே ஆகியோரது ஆட்சியில் இலங்கை, சீனா பக்கம் இருந்தது.
ஆனால் அனுராகுமார திசநாயகா அதிபர் ஆன பிறகு, இலங்கை மீண்டும் இந்தியாவின் நட்பை விரும்புகிறது. மேலும், பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கிய போது முதல் நாடாக இந்தியா உதவிக்கரம் நீட்டியது. இப்படிப்பட்ட சூழலில் இலங்கை அதிபர் திசநாயகாவின் இந்திய பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.