இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை அதிபரிடம் வலியுறுத்துங்கள்- ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்
- இலங்கை அதிபர் அனுராகுமார திசநாயகா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார்.
- பிரதமர் மோடியை இலங்கை அதிபர் திசநாயகா சந்தித்துப் பேசினார்.
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இடதுசாரி கட்சியான 'தேசிய மக்கள் சக்தி' கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயகா வெற்றி பெற்று இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர், அதிபர் திசநாயகாவை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்று இலங்கை அதிபர் அனுராகுமார திசநாயகா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இலங்கை அதிபர் திசநாயகா சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "இலங்கையில் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கவும், மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை ரத்து செய்யவும் இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும்" என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.