இந்தியா

பிச்சை போடுபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. பிச்சைக்காரர்களை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவுப்பு

Published On 2024-12-16 11:49 GMT   |   Update On 2024-12-16 11:49 GMT
  • இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் இந்தூர்.
  • பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம்

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் இந்தூர். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த நகரத்திலும் இந்தியாவில் உள்ள வேறெந்த நகரத்தையும் போலவே பிச்சைகாரர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

இந்த பிச்சைக்காரர்கள் நகரத்தின் தூய்மையைக் கெடுப்பதாகக் கருதிய மாவட்ட நிர்வாகம் அவர்களை ஒழித்துக்கட்ட புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது வரும் ஜனவரி 1ம் தேதி முதல், பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு [எஃப்.ஐ.ஆர்] பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாத இறுதி வரை தொடரும். ஜனவரி 1 முதல் யாராவது பிச்சை போடுவது, கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். மக்களுக்கு பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம் என்று இந்தூரில் வசிப்பவர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்

பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரச்சார திட்ட அலுவலர் தினேஷ் மிஸ்ரா கூறுகையில், நாங்கள் இதுதொடர்பாக ஆராயும்போது சில பிச்சைக்காரர்கள் வீடு வைத்திருப்பதையும், மற்றவர்களின் குழந்தைகள் வங்கியில் வேலை செய்வதையும் அறிந்தோம்.

ஒரு முறை பிச்சைக்காரர் ஒருவர் ரூ. 29,000 வைத்திருந்ததைப் பார்த்தோம். மற்றொரு பிச்சைக்காரர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை அறிந்தோம்.

இங்கு பிச்சை எடுப்பதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த குழந்தைகளுடன் ஒரு கும்பல் வந்தது. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து குழந்தைகளை மீட்கப்பட்டனர் என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News