அரசியலமைப்பில் காங்கிரஸ் செய்த முதல் திருத்தமே பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதுதான் - நிர்மலா சீதாராமன்
- எவ்வளவு தீய அரசியலமைப்பாக இருந்தாலும் அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் அது நல்லதாக மாறும்
- ஆனாலும் கடந்த 70 ஆண்டுகளில் அரசியலமைப்பில் பல திருத்தங்கள் நடந்துள்ளது
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கூட்டத்தொடரின் நான்காவது மற்றும் கடைசி வாரம் இன்று [திங்கள்கிழமை] தொடங்கியது. அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு 75 வருட நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் கடந்த வாரம் முதல் இரு அவைகளிலும் சிறப்பு உரைகள் இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியலமைப்பின் மீது, மாநிலங்களவையில் உரையாற்றினார்.
எவ்வளவு நல்ல அரசியலமைப்பாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் சரியில்லை என்றால் அது தீயதாகும், எவ்வளவு தீய அரசியலமைப்பாக இருந்தாலும் அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் அது நல்லதாக மாறும் என்ற அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டினார்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 50 க்கும் மேற்பட்ட நாடுகள் சுதந்திரமடைந்து, அவற்றின் அரசியலமைப்பை எழுதின. ஆனால் பலர் தங்கள் அரசியலமைப்பை முற்றிலுமாக மாற்றினர். ஆனால் நாம் இன்னும் அதை கடைபிடித்து வருகிறோம். இந்திய அரசியலமைப்பு காலத்தின் சோதனையை தாங்கியது.
ஆனாலும் கடந்த 70 ஆண்டுகளில் அரசியலமைப்பில் பல திருத்தங்கள் நடந்துள்ளது. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓராண்டுக்குள் பேச்சுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த காங்கிரஸ் முதல் திருத்தும் கொண்டுவந்தது என்று விமர்சித்தார். முன்னதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவையில் பதவியேற்றனர்.