மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: சஞ்சய் ராவத் வலியுறுத்தல்
- 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
- எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
மும்பை :
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே கடந்த 30-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு 40 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவாக உள்ளது. இந்தநிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா நடவடிக்கை எடுக்க தொடங்கியது.
இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக உள்ளனர். அவர்கள் பொறுப்பேற்ற 17 நாட்கள் ஆன பிறகும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை.
இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், "2½ லட்சம் மக்கள் உள்ள பர்போடாசுக்கு 27 மந்திரிகள் உள்ளனர். ஆனால் 12 கோடி மக்கள் உள்ள மகாராஷ்டிராவிற்கு 2 மந்திரிகள் மட்டுமே உள்ளனர்.
அரசியல் அமைப்பு இங்கு எங்கு உள்ளது?. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மந்திரி சபையில் முதல்-மந்திரியுடன் சேர்த்து 12 மந்திரிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என அரசியல் அமைப்பு சொல்கிறது. எனவே கடந்த 2 வாரமாக 2 நபர் மந்திரி சபை எடுக்கும் அனைத்து முடிவுகளும் சட்டத்தின்படி செல்லாது. மரியாதைக்குரிய கவர்னரே, இங்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது?" என கூறியுள்ளார்.