இந்தியா
அபராதம் மூலம் ரெயில்வேக்கு  ரூ.562 கோடி வருவாய்: மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

அபராதம் மூலம் ரெயில்வேக்கு ரூ.562 கோடி வருவாய்: மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

Published On 2025-03-26 23:42 IST   |   Update On 2025-03-26 23:42:00 IST
  • கடந்த 2023-24ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 2.16 கோடி பயணிகள் பிடிபட்டுள்ளனர்.
  • அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரெயில்வே ரூ.562 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் இன்றி பிடிபட்ட பயணிகள் எண்ணிக்கை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மக்களவையில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

கடந்த 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த சுமார் 2.16 கோடி பயணிகளை இந்திய ரெயில்வே கண்டறிந்தது. அந்தப் பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.562.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கேமராக்கள், ஏ.ஐ. அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம் டிக்கெட் இல்லாத பயணிகளைக் கண்டறியும் விகிதம் உயர்ந்துள்ளது.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அபராத வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் எடுக்காத பயணிகள் பதிவாகியுள்ளனர். டிக்கெட் இல்லாத பயணம் ரெயில்வேக்கு ஏராளமான நிதி இழப்பை ஏற்படுத்துகிறது.

உள்ளூர் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அல்லது ரெயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, மண்டல ரயில்வேக்களால் அவ்வப்போது சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

டிக்கெட் சரிபார்ப்பு செயல்பாடு மற்றும் சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்களை நடத்துவது இந்திய ரெயில்வேயில் தொடர்ச்சியான பயிற்சியாகும். இந்த நடவடிக்கைகள் முறைகேடுகளைக் குறைக்கவும், ரெயில்வே வருவாயை மேம்படுத்தவும் உதவுகின்றன என தெரிவித்தார்.

Tags:    

Similar News