காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக சித்தரிப்பதா?: காங்கிரஸ் மீது பா.ஜ.க. சாடல்
- கர்நாடகா மாநிலம் பெலகாவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
- தலைவர்களை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களில் காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவில் இன்று, நாளை ஆகிய இரண்டு நாட்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் இந்திய வரைபடம் இடம் பிடித்துள்ளது. அதில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது அவமானம் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
பேனர்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பா.ஜ.க. அமித் மால்வியா "பெலகாவி நிகழ்வில் காங்கிரஸ் தனது அனைத்து விளம்பரப் பலகைகளிலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா உள்ளிட்டோரின் படங்களுடன் இந்தியாவின் சிதைந்த வரைபடத்தையும் வைத்துள்ளது. அதில் காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது.
இது ஒரு தவறாக இருக்க முடியாது. இது ஒரு அறிக்கை. இது அவர்களின் திருப்திப்படுத்தும் அரசியலின் ஒரு பகுதியாகும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு விசுவாசமானவர்கள் என்று நம்புகிறது. காங்கிரஸ் என்பது புதிய முஸ்லிம் லீக். அது மீண்டும் இந்தியாவை உடைக்க விரும்புகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில பாஜக "காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக சித்தரிப்பது இந்திய இறையாண்மையை அவமதிப்பதாகும். இவை அணைத்தும் அவர்களுடைய வாக்கு வங்கிகளை திருப்தி படுத்துவதற்கானது. இது அவமானம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு காங்கிரஸ் பதில் அளித்துள்ளது. அதன் பதிலில் "இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பேனர் கிடையாது. சிலரின் ஆதரவாளர்களால் வைக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க செயற்குழு கூட்டத்தை திசை திருப்புவதற்காக பா.ஜ.க. முயல்கிறது எனத் தெரிவித்துள்ளது.