அலகாபாத் உயர்நீதிமன்ற சர்ச்சை தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை
- நாட்டின் தீவிரமான பிரச்சனையில் முற்றிலும் உணர்வுப்பூர்வமற்று அலகாபாத் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
- சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனிதத்தன்மை அற்ற வகையில் அணுகப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ஆகாஷ் அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாயில் அருகே இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சிலர் இவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும் ஐ.பி.சி. பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, "சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும், அவரின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து அவரை இழுப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்று தெரிவித்து அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகளை மாற்றியமைத்தார்.
அதாவது குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐபிசி பிரிவு 354-பி (ஆடையைப் பிடித்து தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9/10 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் மாற்றி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
பெண்ணின் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அலகாபாத் நீதிபதி வழங்கிய சர்ச்சை தீர்ப்பை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட், நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இதுகுறித்து கூறியதாவது:-
போதிய sensitivity இல்லாமல் எழுதப்பட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.
நாட்டின் தீவிரமான பிரச்சனையில் முற்றிலும் உணர்வுப்பூர்வமற்று அலகாபாத் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.
இது மிகவும் முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய சம்பவம். உணர்ச்சியற்ற மனநிலையில் இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கி உள்ளதை இது காட்டுகிறது. தீர்ப்பை எழுதியவருக்கு உணர்ச்சியே இல்லை. இதை சொல்வதற்கு எங்களுக்கு வேதனையாக உள்ளது.
சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனிதத்தன்மை அற்ற வகையில் அணுகப்பட்டுள்ளது. அலகாபாத் நீதிபதி தனது தீர்ப்பில் கடினமான வார்த்தையை பயன்படுத்தியதற்கு வருந்துகிறோம் என்று கூறினர்.