வயநாடை அச்சுறுத்திய ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு
- புலியை குறிபார்த்து சுடுவதற்காக திறமை வாய்ந்த வீரர்களும் வரவழைக்கப்பட்டனர்.
- ஆட்கொல்லி புலி இறந்து கிடந்ததை வனத்துறையினர் அதிகாலை 2 மணியளவில் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியை ஒட்டியவாறு இருக்கின்றன. இதனால் அங்குள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் புகுந்துவிடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
அதிலும் புலி போன்ற மனித உயிருக்கு அச்சுறுத்த லான விலங்குகளும் புகுந்து விடுகின்றன. இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி வயநாட்டில் புலி தாக்கி பெண் ஒருவர் இறந்து விட்டார். வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள பஞ்சரக்கொல்லி பகுதியை சேர்ந்த வனக்காவலரான அச்சப்பன் என்பவரின் மனைவி ராதா சம்பவத்தன்று காபி பறித்துக் கொண்டிருந்த போது புலி அவரை கொன்றது.
ராதாவின் உடலை வனப்பகுதிக்குள் 100 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்று பாதி உடலை தின்று விட்டது. ராதாவின் பாதி உடல் மட்டுமே சம்பவ இடத்தில் கிடந்தது. ராதாவை கொன்று தின்ற புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டமும் நடத்தினர். இதையடுத்து ராதாவை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டது. மேலும் அந்த புலியை ஆட்கொல்லி புலி என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன் நடமாட்டம் இருந்த பகுதிகளில் வனக்குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் புலி பொதுமக்கள் யாரையும் தாக்கிவிடக்கூடாது என்பதற்காகவும், புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மானந்தவாடி பகுதியில் 48 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் பள்ளிகளை இன்றும், நாளையும் திறக்கவேணடாம் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை புலியை தேடிச்சென்ற வனக்குழுவை சேர்ந்த ஜெயசூர்யா என்பவரை புலி தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பெண் ஒருவரை புலி கொன்ற நிலையில், வனக்குழு ஊழியரும் புலியின் தாக்குதலுக்கு உள்ளானதால் வயநாட்டில் மேலும் பரபரப்பு ஏற்பட் டது. இதனால் புலியை சுடும் நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. வனத்துறையை சேர்ந்த அதிரடிப்படையினர், சிறப்பு அதிரடிப்படை கமாண்டோ பிரிவினர் உள்ளிட்டோர் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.
புலியை குறிபார்த்து சுடுவதற்காக திறமை வாய்ந்த வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வனப்பகுதியில் 6 குழுக்களாக பிரிந்து சென்று புலியை தேடினர். அப்போது ஒரு இடத்தில் புலி பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அந்த இடத்தை வனத்துறையினர் சுற்றி வளைத்து தேடினர்.
அப்போது வனப்பகுதியில் உள்ள குப்பைமேடு பகுதியில் வனத்துறையினர் தேடிவந்த ஆட்கொல்லி புலி இறந்து கிடந்தது. அந்த புலியின் கழுத்து பகுதியில் 2 ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்துள்ளன. மற்றொரு புலியுடன் ஏற்பட்ட மோதலில் இந்த புலி காயமடைந்து இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிரேத பரிசோதனைக்கு பிறகே புலி எப்படி இறந்தது என்பது தெரியும் என்பதால் அதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆட்கொல்லி புலி இறந்து கிடந்ததை வனத்துறையினர் அதிகாலை 2 மணியளவில் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
அதன்பிறகு புலியின் உடலை வனப்பகுதியில் இருந்து அடிவாரத்தில் உள்ள வன அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். ஆட்கொல்லி புலி எப்படி இறந்தது? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கொல்லி புலி இறந்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.