டெல்லி விபத்து சம்பவம்: பெண்ணின் தலை உடைந்து சிதறிவிட்டதாக பிரேத பரிசோதனையில் தகவல்
- கார் விபத்தில் பலியான அஞ்சலி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
- தோழியிடம் போலீசார் நேற்று வாக்குமூலம் வாங்கினார்கள். அப்போது அவர் பல்வேறு பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
டெல்லியில் புத்தாண்டு தின நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக சென்றிருந்த 23 வயது அஞ்சலி ஸ்கூட்டரில் தோழியுடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது கார் மோதி விபத்துக்குள்ளானார்.
காரில் அவரது கால்கள் சிக்கிக் கொண்டதால் டெல்லி சாலைகளில் சுமார் 13 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த கோர விபத்தில் அவர் உடல் சிதைந்து பரிதாபமாக பலியானார்.
பால்காரர் ஒருவர் காருக்கடியில் பெண் சிக்கி இழுத்துச் செல்லப்படுவதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போலீசார் அந்த காரை அடையாளம் கண்டுபிடித்து காரில் இருந்த 5 பேரையும் கைது செய்தனர்.
தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிருஷ்ணன், மிதுன், மனோஜ் மிட்டல் என்ற அந்த 5 பேரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மது அருந்திவிட்டு அரியானாவில் உள்ள தங்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.
ஆனால் அஞ்சலி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகித்தனர். எனவே 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியினரும் போராட்டத்தில் இறங்கினார்கள்.
இந்தநிலையில் கார் விபத்தில் பலியான அஞ்சலி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை அஞ்சலியின் தாய் பெற்றுக் கொண்டார். டெல்லியில் நேற்று பலத்த பாதுகாப்புடன் அஞ்சலி உடல் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததன் மூலம் அஞ்சலியுடன் அவரது தோழி நிதியும் ஸ்கூட்டரில் ஒன்றாக வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிதியிடம் போலீசார் நேற்று வாக்குமூலம் வாங்கினார்கள். அப்போது அவர் பல்வேறு பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
நானும், அஞ்சலியும் நீண்ட நாள் தோழிகள் அல்ல. சமீபத்தில்தான் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பழகினோம். புத்தாண்டை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததால் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றோம். நள்ளிரவு நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டபோது எனக்கும், அஞ்சலிக்கும் தகராறு ஏற்பட்டது.
ஓட்டல் வரவேற்பு அறையில் அஞ்சலி என்னுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். அப்போது ஓட்டல் ஊழியர்கள் எங்களை கண்டித்தனர். இதனால் நாங்கள் இருவரும் ஓட்டலைவிட்டு வெளியே வந்தோம். அப்போதும் அஞ்சலி என்னிடம் கடுமையாக சண்டையிட்டார்.
அஞ்சலி நட்சத்திர ஓட்டலில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டின்போது மது அருந்தி உள்ளார். அது எனக்கு பிறகுதான் தெரியும். அவர் கடுமையான போதையில் இருந்ததால் ஸ்கூட்டரை நான் ஓட்டுகிறேன் என்றேன். அதன்படி முதலில் நான் ஸ்கூட்டர் ஓட்ட அவர் பின் பகுதியில் அமர்ந்து வந்தார்.
வழியில் சண்டை போட்டு நான்தான் ஸ்கூட்டரை ஓட்டுவேன் என்று என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டார். தாறுமாறாக ஸ்கூட்டரை ஓட்டியபடி சென்றார். இதனால் ஒரு லாரியில் மோதி விடுவோமோ என்று பயம் ஏற்பட்டது.
அந்த லாரியிடம் இருந்து தப்பித்த சில நிமிடங்களில் ஸ்கூட்டர் மீது கார் ஒன்று மோதியது. ஸ்கூட்டரின் பின் பகுதியில் இருந்த நான் இடது பக்கம் விழுந்த நிலையில், அஞ்சலி காருக்கு அடியில் விழுந்துவிட்டார். காரில் இருந்தவர்கள் அதை நன்றாக பார்த்தனர்.
காருக்கடியில் விழுந்த அஞ்சலி அலறினாள். ஆனால் காரில் இருந்த 5 பேரும் மிகுந்த சத்தத்துடன் பாடல் கேட்டு வந்ததால் அவர்களுக்கு கேட்டதோ, என்னவோ தெரியவில்லை. காரை முன்பக்கமாக நகர்த்தினார்கள். அப்போது அஞ்சலியின் கால்கள் கார் சக்கரத்துக்கு அடியில் சிக்கிக் கொண்டது.
இதைக்கண்டதும் நான் அதிர்ச்சியில் இருந்தேன். ஆனால் காரில் இருந்தவர்கள் காரை முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் ஓட்டினார்கள். காரில் இருந்து அஞ்சலி விடுப்பட்டு இருப்பாள் என்று நினைத்தார்களோ என்னவோ காரை தொடர்ந்து வேகமாக ஓட்டினார்கள்.
காருக்கு அடியில் சிக்கிக் கொண்ட அஞ்சலியும் இழுத்துச் செல்லப்பட்டார். நான் பயந்து போய் வீட்டுக்கு வந்துவிட்டேன். நீண்டநேரம் அழுது கொண்டே இருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அஞ்சலி உடலில் 40 இடங்களில் படுகாயம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் 13 கி.மீ. தூரத்துக்கு இழுக்கப்பட்டுள்ளதால் தலை சிதறி மண்டை ஓடு திறந்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையின் முழு விவரங்கள் இன்னும் 2 நாளில் போலீசாருக்கு தெரிய வரும். அதன் பிறகுதான் அஞ்சலி மரணத்தில் உள்ள துல்லியமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சலி பற்றி வெளியாகும் தகவல்களை மறுத்துள்ள அவரது குடும்பத்தினர், இது திட்டமிட்ட கொலை என்று கூறி வருகிறார்கள். அஞ்சலியின் தாய் ரேகா கூறுகையில், "சி.பி.ஐ. விசாரணை நடத்தி 5 குற்றவாளிகளையும் தூக்கில் போட வேண்டும்" என்று தெரிவித்தார்.
அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி 10 லட்சம் ரூபாயை நிதி உதவியாக வழங்கி உள்ளது. அஞ்சலியின் மரணத்திற்கு பொறுப்பேற்று உயர் போலீஸ் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 வாலிபர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது போலீஸ் காவல் விசாரணை இன்று முடிகிறது. எனவே இன்று பிற்பகல் 5 வாலிபர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
அஞ்சலி பலியான விவகாரத்தில் உண்மை மறைக்கப்படுவதாகவும், அஞ்சலி மது போதையில் இருந்தார் என்று திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும் டெல்லி மகளிர் அமைப்பு தலைவர் சுவாதி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.