ஜனாதிபதி மாளிகையில் சொந்த ஊர் மக்கள் 60 பேருக்கு விருந்து அளித்த திரவுபதி முர்மு
- ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேர் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டது.
- மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேர் முர்முவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
புதுடெல்லி:
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு அமோக வெற்றி பெற்றார்.
பழங்குடியின சமூகத்தில் இருந்து நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
திரவுபதி முர்மு நேற்று முன்தினம் இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்றார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
திரவுபதி முர்மு, ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் உபர்பேடா கிராமத்தில் பிறந்தவர். அவரது பதவியேற்பு விழாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேர் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் முர்முவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தனது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேரை ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து திரவுபதி முர்மு விருந்து அளித்தார்.
ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அவர்கள் அதனை சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஜனாதிபதி அலுவலகமும் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வந்த பழங்குடியின மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் அழைத்து செல்லப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மயூர்பஞ்ச் மாவட்டத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுஜாதா முர்மு கூறும்போது, "பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.
ஆனால் ஜனாதிபதி மாளிகையில் மதிய விருந்தில் பங்கேற்க அழைப்பார்கள் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. எங்களை அதிகாரிகள் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தபோது இன்ப அதிர்ச்சி அடைந்தோம்.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியே வரும் போது விருந்தினர்களுக்கு இனிப்பு பொட்டலம் வழங்கப்பட்டது. இது ஒரு மறக்க முடியாத அனுபவம்" என்றார்.
கயாமணி பெஷ்ரா, டாங்கி முர்மு ஆகியோர் கூறும்போது, எங்களை மதிய விருந்துக்கு ஜனாதிபதி அழைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்றனர்.
ஜனாதிபதி மாளிகைக்குள் செல்போன் மற்றும் கேமராக்கள் அனுமதிக்கப்படாததால் ஜனாதிபதியுடன் செல்பி, புகைப்படம் எடுக்க முடியவில்லை என்று சிலர் தெரிவித்தனர்.