இந்தியா

காங்கிரஸ் உறவை துண்டித்து இனி தனித்து போட்டியிட வேண்டும்- உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

Published On 2024-11-29 06:03 GMT   |   Update On 2024-11-29 06:03 GMT
  • சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
  • இனி வரும் உள்ளாட்சி தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்று ஆய்வு செய்யப்படும்.

மும்பை:

மராட்டிய மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை தழுவியது.

மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் அந்த கூட்டணிக்கு வெறும் 58 இடங்கள்தான் கிடைத்தன. இந்த தோல்வி காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கும் கடும் அதிர்ச்சிகளை கொடுத்துள்ளது.

குறிப்பாக உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் இந்த தோல்வியை இன்னமும் ஜீரணிக்க முடியாத நிலையில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தவறான முடிவுகளால் தான் தங்களுக்கு தோல்வி ஏற்பட்டு இருப்பதாக அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் கருதுகிறார்கள்.

இதனால் காங்கிரஸ் உடனான உறவை துண்டிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியில் பலரும் போர்க் கொடி தூக்கி உள்ளனர். உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை இனியும் தொடர கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கூடாது என்று உத்தவ் தாக்கரேயின் சிவசேனா முக்கிய கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இதை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களும் ஏற்றுக் கொள்ளும் மன நிலைக்கு வந்துள்ளனர். எனவே மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது.

இதுகுறித்து உத்தவ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "தேர்தல் தோல்வி எங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் உள்ளது. காங்கிரஸ் சரியான ஒருங்கிணைப்பு கொடுக்கவில்லை என்ற எண்ணம் எங்கள் கட்சி தொண்டர்கள் மத்தியில் உள்ளது.

எனவே இனி வரும் உள்ளாட்சி தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்று ஆய்வு செய்யப்படும். அதற்காக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஒரு போதும் விலகி செல்ல மாட்டோம்" என்றார்.

Tags:    

Similar News