ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.. உ.பி. ஒயின் ஷாப்களுக்கு மதுப்பிரியர்கள் படையெடுப்பு!
- வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.
- இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்"
உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் மதுக்கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்ட ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உ.பி. வாழ் மதுபிரியர்கள் ஒயின் ஷாப்களுக்கு படையெடுத்து வருகின்றனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விவகாரம் உ.பி. பாஜக அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் கலால் துறையின் நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விதிகளின்படி, மதுபான ஒப்பந்ததாரர்கள் தங்கள் முழு இருப்பையும் அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும்.
இல்லையெனில் மீதமுள்ள மதுபானங்கள் அரசாங்கக் கணக்கில் சேர்க்கப்படும் மற்றும் அதன் விற்பனை தடை செய்யப்படும். இந்தக் காரணத்திற்காக, மதுபான விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து நோய்டாவை ஒட்டியுள்ள தலைநகர் டெல்லி அரசியலிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ள டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவருமான அதிஷி, "நீங்கள் ஒரு பாட்டில் இலவச மதுபானத்தைப் வழங்குகிறீரங்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்போது பாஜகவினர் வருவார்கள் என நம்புகிறேன். இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதம் வரை சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.