தெலுங்கானாவில் கணவரை காப்பாற்ற புலியை கற்களால் வீரட்டியடித்த மனைவி
- கணவனும், மனைவியும் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.
- மனைவி கற்களை எடுத்து புலி மீது வீசி கூச்சலிட்டார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், குமரம் பீம் மாவட்டம்,சிர்ப்புர் அடுத்த டுப்பாக்குடாவை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி. இவரது மனைவி சுஜாதா. இருவரும் நேற்று நிலத்திற்கு சென்று விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த புலி ஒன்று திடீரென பாய்ந்து வந்து சுரேசை தாக்கியது. இதில் சுரேஷின் கழுத்து மற்றும் உடல் பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சுரேஷ் வலியால் அலறி துடித்தார்.
இதனைக் கண்ட அவரது மனைவியை சுஜாதா அங்கிருந்த கற்களை எடுத்து புலி மீது வீசி கூச்சலிட்டார். இதனைக் கண்ட புலி அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஓடியது.
அருகில் இருந்தவர்கள் சுரேஷை மீட்டு சிர்புர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக மஞ்சரியாலா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று முன்தினம் லட்சுமி என்ற பெண்ணை புலி கடித்து கொன்றது. அதே புலி தான் நேற்று விவசாயியை தாக்கியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.