காதல் தகராறில் ஓட்டல் மீது வெடிகுண்டு வீச்சு
- ஓட்டலில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் திருபுவனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனையில் 4 முனை சந்திப்பில் தனியார் வணிக வளாகம் உள்ளது.
இந்த வணிக வளாகத்தில் திருபுவனை பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். வேலைக்கு ஆட்கள் வராததால் ஓட்டல் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஓட்டல் கடை மீது திடீரென நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு சென்றனர். இதனால் அங்கு பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதியில் இருந்த கடைக்காரர்கள், பொது மக்கள் அலறியடித்து ஓடினர்.
பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது வெடிகுண்டு வீச்சில் சேதமான ஓட்டல் பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் செந்தில் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஓட்டல் உரிமையாளர் செந்திலின் மகன் ராகுல் தனது நண்பரின் காதலுக்கு உதவி செய்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக ராகுலும் அவரது நண்பரும் பிரிந்து விட்டனர்.
அதுமுதல் ராகுல் மீது அவரது நண்பர் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த முன்விரோதம் காரணமாக ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக ஓட்டல் மீது வெடிகுண்டு வீசிய நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஓட்டலில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் திருபுவனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.