இலங்கை கடற்படையை கண்டித்து காரைக்காலில் கடையடைப்பு போராட்டம்
- பஸ், வேன், ஆட்டோ, பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கியது.
- 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால்:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி, காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற காரைக்கால் கிளிஞ்சல் மேட்டை சேர்ந்த 13 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அராஜக முறையில் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தது.
இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் செந்தமிழ் என்ற மீனவர் காலில் பயங்கர அடிபட்டு காலை எடுக்கும் நிலையிலும், மணிகண்டன் என்ற மீனவர் கண் பறிபோகும் நிலையிலும், மற்றொருவர் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்தும், காயப்பட்டு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களுக்கு மேல் சிகிச்சை செய்ய விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கையில் உள்ள தங்களது படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த 11-ந் தேதி முதல் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இன்று 8-வது நாளாக, மாவட்டம் முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால் பஸ், வேன், ஆட்டோ, பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கியது.
மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக காரைக்காலில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
மீன் விற்பனை இல்லாததால் மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.