கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து தெளிக்க ஏற்பாடு
- டிரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியை புதுச்சேரி நகராட்சி தொடங்க உள்ளது.
- ஒரு நாளைக்கு மொத்தமாக 15 ஏக்கர் அளவிற்கு மருந்து அடிக்கும் பணி நடைபெற உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொசுக்கள் அதிகரிப்பால் மக்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
பகல் நேரங்களிலும் கொசு தொல்லையால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.
அதையொட்டி புதுச்சேரி நகராட்சி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த தீவிரமாக களம் இறங்கி உள்ளது. புதுச்சேரி நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளுக்கு கொசு மருந்து தெளிப்பான் மிஷின்கள் 30, புகை மருந்து அடிக்கும் 5 மிஷின்கள் புதிதாக வாங்கப்பட்டு, நகராட்சி ஊழியர்களுடன், மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியின் நகர பகுதியான முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை ஆகிய 5 தொகுதிகளில் செல்லும் பிரதான பெரிய வாய்க்கால்களில் வாடகை 'டிரோன்' மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியை புதுச்சேரி நகராட்சி தொடங்க உள்ளது.
இதற்காக விவசாய நிலங்களில் பூச்சி மருந்து அடிக்கும் டிரோனை புதுச்சேரி நகராட்சி வாடகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த டிரோனில் 20 நிமிடத்தில் ஒரு ஏக்கர் அளவிற்கு மருந்து அடிக்க முடியும். ஒரு நாளைக்கு மொத்தமாக 15 ஏக்கர் அளவிற்கு மருந்து அடிக்கும் பணி நடைபெற உள்ளது.