புதுச்சேரியில் கூட்டணி அரசுக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
- ரங்கசாமி மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கூட்டணி கட்சியான என்.ஆர். காங்கிரஸ் ஆலோசனை பெறாமலேயே நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய பா.ஜ.க. அரசு நியமித்தது.
இதில் என்.ஆர். காங்கிரசுக்கு எந்த பிரதிநிதித்துவமும் அளிக்கப்படவில்லை. அன்று முதலே என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. இடையே உரசல் தொடர்ந்து வருகிறது.
அதிகார பதவிகளில் இல்லாத பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், தங்களுக்கு வாரிய பதவி வேண்டும் என கடந்த 4 ஆண்டாக கேட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பா.ஜ.க. தலைமை நிர்வாகிகளும், முதலமைச்சர் ரங்கசாமியிடம் வாரிய பதவி வழங்கும் படி வலியுறுத்தினர்.
ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி இதுவரை யாருக்கும் வாரிய பதவி வழங்கவில்லை. இது ரங்கசாமி மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக்கூட கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி அளிப்பதில்லை. தொகுதியில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக்கூட முடியவில்லை என பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதங்கப்பட்டனர்.
தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினர்.
நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கு பிறகு அதிருப்தி பா.ஜ.க., ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர். டெல்லியில் பா.ஜ.க. தலைமை நிர்வாகிகளை சந்தித்தும் இதுகுறித்து பேசினர்.
இதனிடையே புதுவை அரசு புதிதாக 8 மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க ஒப்புதல் அளிக்க கூடாது என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டமன்றம் கூடியது. கூட்டத்துக்கு வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், கல்யாண சுந்தரம், ரிச்சர்டு, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், சீனிவாச அசோக் ஆகியோர் சட்டசபை படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோஷம் எழுப்பி தர்ணா போராட்டம் நடத்திய பின் சட்டசபை நிகழ்வில் பங்கேற்றனர்.
கூட்டணி ஆட்சியிலிருந்து கொண்டே அரசை எதிர்த்து சட்டமன்றத்தில் போராட்டம் நடத்தியிருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் என்.ஆர். காங்கிரசுடனான கூட்டணியை தொடர பா.ஜ.க. தலைமை விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தகைய சூழலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் போராட்டம் கூட்டணி தொடருமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.