அரசு பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்
- பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்ததால் அதன் சுவர்கள் தண்ணீரில் ஊறி சேதமாகி இருந்தது.
- அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 மாணவர்களுக்கு கை, கால் மற்றும் இடுப்பிலும் காயமடைந்தனர்.
பாகூர்:
புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த பூ.புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6 வகுப்பறைகள் மற்றும் சமையல் கூடம் மற்றும் கழிப்பிட கட்டிடம் இருந்து வருகிறது.
இந்தப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வந்த நிலையில் தற்போது குறைந்த அளவிலேயே மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
சுமார் 35 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இப்பள்ளி கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமாகி உள்ளது. அனைத்து வகுப்பறைகளும் மழை காலங்களில் தண்ணீர் கசிகிறது. மேலும் தளத்தின் காரைகள் உடைந்தும் காணப்படுகிறது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அரசுக்கு பலமுறை ஒரு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தப் பள்ளியை தொடங்கிய காலத்தில் அப்போதிருந்த ஆசிரியர்கள், பொதுமக்கள் உதவியுடன் குடிநீருக்கும் மாணவர்கள் கை கழுவதற்கும் தொட்டி அமைக்கப்பட்டு குழாயும் இணைத்திருந்தனர்.
பல ஆண்டுகளாக இதை பராமரிக்கப்படாமல் இருந்து வந்ததால் அதன் சுவர்கள் தண்ணீரில் ஊறி சேதமாகி இருந்தது.
இதற்கிடையே அரசு மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் புதிதாக குடிநீருக்கும், கை கழுவதற்கும் மாற்று ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் பழைய குடிநீர் தொட்டியை அகற்றப்படாமல் இருந்து உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு வந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பழைய குடிநீருக்காக போடப்பட்ட சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 மாணவர்களுக்கு கை, கால் மற்றும் இடுப்பிலும் காயமடைந்தனர். இதை கண்ட மற்ற மாணவர்கள் அலறிஅடித்துகொண்டு சிதறி ஓடினர்.
குடிநீர் தொட்டி கட்டிடம் இடிந்ததில் 4-ம் வகுப்பு படிக்கும் செந்தில்குமாரின் மகன் பவன்குமார் (வயது 8) செல்லக்கண்ணு மகன் பவின் (8), 5-ம் வகுப்பு படிக்கும் ரஜினியின் மகள் தேஷிதா (10) ஆகியோர் காயமடைந்தனர்.
இதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக காயமடைந்த மாணவர்களை மோட்டார் சைக்கிளில் தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு டாக்டர்கள் முதலுதவி செய்யப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து மாணவ - மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதை அறிந்தவுடன் கல்வித்துறை வட்ட ஆய்வாளர் லிங்கசாமி சம்பவ இடத்திற்கு பார்வையிட்டு ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது. தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் விபத்துக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.