தி.மு.க. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்து சட்டசபை கூட்ட அரங்கின் வெளியே அமர்ந்திருந்த காட்சி.
கூடுதல் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க.-காங். வெளிநடப்பு
- மத்தியிலும், புதுவையிலும் ஒரே கூட்டணியின் ஆட்சிதான் நடக்கிறது.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறுக்கிட்டு, ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.61 கோடி வழங்கியுள்ளது என்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து சபையின் அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சென்றார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் சிவா குறுக்கிட்டு பேசியதாவது:-
மத்திய அரசு தொடர்ந்து புதுவையை வஞ்சித்து வருகிறது. நிதி கமிஷனில் புதுவையை சேர்க்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு கூடுதல் நிதி வழங்கவில்லை. ரெயில்வே, துறைமுக விரிவாக்க திட்டங்கள் இடம்பெறவில்லை. நாட்டிலேயே ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரிதான் அதிகளவில் பாதிக்கப்பட்டது.
ஆனால் அதற்கான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்தியிலும், புதுவையிலும் ஒரே கூட்டணியின் ஆட்சிதான் நடக்கிறது.
தமிழகத்தை போல மாற்று ஆட்சி இருந்தாலும், வஞ்சிப்பதில் அர்த்தம் இருக்கும். இதனால் மத்திய அரசு புதுவையை வஞ்சிப்பதை கண்டித்து சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறுக்கிட்டு, ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.61 கோடி வழங்கியுள்ளது என்றார்.
அமைச்சர் நமச்சிவாயம்:- மத்திய அரசு புதுவைக்கு தேவையான நிதியை தொடர்ந்து வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஒத்துழைப்போடுதான் புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
அவருக்கு ஆதரவாக அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, அசோக்பாபு, வி.பி. ராமலிங்கம், வெங்கடேசன், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், சீனிவாச அசோக் ஆகியோர் பேசினர். இதற்கு எதிராக தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசினர்
இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், ஜான்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர், மத்திய அரசு பற்றி எதிர்க்கட்சியினர் பேசிய பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. நாஜிம், இன்று உங்கள் நாடகம் என்ன? வெளியில் ஒன்று செய்வீர்கள், உள்ளே ஒன்று செய்வீர்கள், முதலில் மண்ணை நேசியுங்கள், பின்னர் கட்சியை நேசியுங்கள் என்றார்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
எதிர்க்கட்சிகள் மத்திய அரசு நிதி தரவில்லை என குற்றம்சாட்டி பேசுகின்றனர். கடந்த ஆட்சியில் ஒரே ஒரு செங்கலைக்கூட எடுத்து வைக்க முடியவில்லை என கூறினர். 5 ரூபாய்கூட மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை என உள்துறை அமைச்சராக இருந்தவரே கூறியுள்ளார்.
தற்போது எத்தனை கோடியில் பணிகள் நடக்கிறது? காலாப்பட்டில் கடந்த 3 நாட்களில் ரூ.30 கோடிக்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. எந்த திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை? கொண்டு வரவில்லை? என சுட்டிக்காட்டுங்கள்.
இலவச அரிசி வேண்டும் என மக்கள் கேட்டனர். ரேஷன் கடைகளை திறந்து அரிசி வழங்கியுள்ளோம். புயல் நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.5 ஆயிரம், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கியுள்ளோம். மத்திய அரசு தேவையான நிதியை வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு வகைகளில் கூடுதல் நிதி பெறவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும் இந்த விளக்கத்தை ஏற்காமல் எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில் குமார், நாக.தியாகராஜன், ரமேஷ்பரம்பத், வைத்தியநாதன் ஆகியோர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.