முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மீது வழக்கு தொடரப்படும்- அமைச்சர் நமச்சிவாயம்
- பள்ளி சிறுமி பாலியல் தொடர்பான வழக்கில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சுயலாபத்துக்காக, உள்நோக்கத்துடன் அரசியல் செய்கிறார்கள்.
- அரசு, தனியார் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் பா.ஜ.க.வை சேர்ந்த நமச்சிவாயம் உள்துறை அமைச்சராகவும், ஏம்பலம் செல்வம் சபாநாயகராகவும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பள்ளி சிறுமி பாலியல் தொடர்பான வழக்கில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சுயலாபத்துக்காக, உள்நோக்கத்துடன் அரசியல் செய்கிறார்கள்.
இதில் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட்டுள்ளனர். காவல் துறை மெத்தனமாகவோ, அலட்சியமாகவோ இல்லை.
பாலியல் பாதிப்பு தொடர்பாக குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது. இதற்கு நீதிமன்றத்தில் மூலம்தான் தீர்வு காணமுடியும். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டால் நீதி மன்றமே முடிவு எடுக்கும்.
அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மாற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். அருகில் உள்ள பள்ளியில் செய்முறை தேர்வு செய்ய அனுமதி தந்துள்ளது.
சி.பி.ஐ. விசாரணை தேவையா? என்ற சூழலை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். அரசு, தனியார் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்படும். குழந்தைகள் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சியிலும் பல குற்றங்கள் நடந்துள்ளன. என்னையும், சபாநாயகர், முதலமைச்சரையும் சம்பந்தப்படுத்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் சொல்கிறார்.
முதலமைச்சராக நாராயணசாமி இருந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான 413 குற்றங்களும், போக்சோ வழக்குகள் 366-ம், பாலியல் பலாத் காரம் 47, கொலை 174, செயின் பறிப்பு 222-ம் நடந்தது.
அவர் ஆட்சியில் எதுவும் நடக்காதது போல் கூறுகி றார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லி வருகிறார். காவல் துறையில் குடும்ப தலையீடு இருப்பதாக நாராயணசாமி பேசுவது கண்டிக்கத்தக்கது. எங்கள் குடும்பத்தில் உள்ளோர், பெண்கள் அரசியலிலும், நிர்வாகத்திலும் எந்த காலத்திலும் தலையிட்டதில்லை, தலையிடபோவதுமில்லை.
குடும்பத்தினரை அரசியலுக்காக களங்கப்படுத்துவது வருத்தமளிக்கிறது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்புவதை நாராயணசாமி நிறுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எந்த குற்றவாளியையும் விடுவிக்க அவரிடம் சிபாரிசு செய்ததில்லை. அவர் உண்மைக்கு மாறாக குற்றஞ்சாட்டுவது நல்லதல்ல. நேர்மையுடன் அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையுண்டு.
இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.