பதவியேற்ற 4 ஆண்டுகளில் 3 தடவை மட்டுமே அரசு முறை பயணமாக டெல்லி சென்ற புதுச்சேரி முதலமைச்சர்
- ஒவ்வொரு அமைச்சரும் தலா ஒரு கார் பயன்படுத்துகிறார்கள்.
- பொதுப்பணித்துறை அமைச்சர் மட்டும் அரசு முறை பயணமாக 6 முறை வெளிநாடு சென்றுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை குயவர்பாளையத்தை சேர்ந்த அசோக்ராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் புதுவை அமைச்சர்கள் அலுவலகத்தில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள்? கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் வரை அலுவலக டீ, காபி மற்றும் பூங்கொத்து வாங்கிய செலவுகள், கார் பயன்பாடு, வெளிநாட்டு பயணம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அமைச்சர்களின் செலவு தொடர்பாக அமைச்சரவை அலுவலக பொதுதகவல் அதிகாரியான அமுதன் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு அமைச்சரும் தலா ஒரு கார் பயன்படுத்துகிறார்கள். அமைச்சர்களின் அலுவலகத்தில் தலா 14 பேர் பணிபுரிகிறார்கள். உள்துறை அமைச்சர் அலுவலக காபி, டீ செலவாக ரூ.7 லட்சத்து 12 ஆயிரத்து 635-ம், பொதுப் பணித்துறை அமைச்சருக்கு ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 421-ம், வேளாண்துறை அமைச்சருக்கு ரூ.11 லட்சத்து 84 ஆயி ரத்து 320-ம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு ரூ.14 லட்சத்து 94 ஆயிரத்து 39-ம் செலவிடப்பட்டுள்ளது.
பூங்கொத்து வாங்கிய வகையில் உள்துறை அமைச்சருக்கு ரூ.22 லட்சத்து 31 ஆயிரமும், பொதுப்பணித்துறை அமைச்சருக்கு ரூ.8 லட்சத்து 4 ஆயிரத்து 955-ம், முன்னாள் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சருக்கு ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்து 700-ம், இந்நாள் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சருக்கு ரூ.1 லட்சத்து 400-ம் செலவிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சர் மட்டும் அரசு முறை பயணமாக 6 முறை வெளிநாடு சென்றுள்ளார். அமைச்சர்களின் தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் குறித்த தகவல் ஏதும் அரசு பதிவேடுகளில் கிடையாது. முதலமைச்சர் ரங்கசாமி 3 முறை மட்டுமே அரசு பயணமாக டெல்லி சென்று வந்துள்ளார். ஆனால் வெளிநாடு பயணம் ஏதும் செல்லவில்லை.
அமைச்சர்கள் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை எரிபொருள் தேவைக்கு செலவிட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.