சிறப்புக் கட்டுரைகள்
null

காமராஜர் செய்த கல்விப்புரட்சி- முனைவர் கவிஞர் இரவிபாரதி

Published On 2022-10-20 09:55 GMT   |   Update On 2022-10-20 10:24 GMT
  • மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே முக்கியமல்ல, அவர்களுக்கு வழங்கப்படுகிற கல்வியின் தரம், அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்றும் சிந்தித்தார் காமராஜர்.
  • பள்ளிகளில் பாடம் நடத்துகிற ஆசிரியர் நன்கு பயிற்சி பெற்று வர வேண்டும் என்பதற்காக ஆசிரியர் பயிற்சி பள்ளிகளையும், பல்வேறு இடங்களில் ஏற்படுத்தினர் காமராஜர்.

எல்லோரும் படித்துவிட்டால்... வேலைக்கு எங்கே போவது? என்று கேட்டவர்தான் ராஜாஜி. அதனால் தான் பாதிநாள் பள்ளிக்கூடம், மீதிநாள் குலத்தொழில் செய்வது என்று திட்டமிட்டார் ராஜாஜி. ஆனால் எல்லா மக்களும் படிக்க வேண்டும். அதற்கான வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்தவர்தான் காமராஜர். அதனால் தான் பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக ஏற்கனவே 1937-39 வரை ராஜாஜி பதவியில் இருந்த போது மூடிய 2 ஆயிரத்து 500 ஆரம்ப பள்ளிகளையும், இரண்டாம் தடவையாக பதவி வகித்தபோது மூடிய 6 ஆயிரம் பள்ளிகளையும் திறந்திட உத்தரவிட்டார் காமராஜர். அடுத்த கட்டமாக 14 ஆயிரம் பள்ளிகளை படிப்படியாக திறந்தார். மூன்று மைல் தொலைவில் நடுநிலைப் பள்ளியையும், 5 மைல் தொலைவில் உயர்நிலைப்பள்ளிகளையும் திறந்து கொண்டே வந்தார்.

14 ஆயிரமாக இருந்த ஆரம்ப பள்ளிகளின் எண்ணிக்கை 1957-ல் 15 ஆயிரத்து 800 ஆக உயர்ந்தது. 1962-ல் 29 ஆயிரம் பள்ளிகளாக ஆனது. 1951-ல் உயர்நிலைப்பள்ளிகள் 637 என்றளவில் தான் இருந்தன. காமராஜர் பொறுப்பேற்றதற்கு பின்னர் அவை 814 ஆகவும், அதற்கு பின்னர் 1962-ல் 1995 ஆகவும் உயர்ந்தன. பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்தது போல், படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1952-ல் 3 லட்சத்து 33 ஆயிரமாக இருந்தது. 1956-ல் இந்த எண்ணிக்கை 4,36,000 ஆக இருந்தது. 1957-ல் 4 லட்சத்து 73 ஆயிரமாகவும் 1962-ல் 9 லட்சமாகவும் உயர்ந்தது.

காமராஜர் பதவி ஏற்றபோது மொத்த பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) ரூ.47.18 கோடிதான். காமராஜர் பதவி விலகுவதற்கு முன் அதாவது 1962-63-ல் மொத்த பட்ஜெட் ரூ.121.81 கோடி மட்டுமே. இந்த தொகையை வைத்துக்கொண்டுதான் இத்தனை புரட்சிகளையும் செய்தார் காமராஜர்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 45-வது பிரிவின்படி 14 வயதிற்குட்பட்ட எல்லா பிள்ளைகளுக்கும் கட்டாய இலவச கல்வியை வழங்கிடுமாறு வற்புறுத்துகிறது. ஆனால் இதனை இந்தியாவில் எந்த மாநில முதல்வரும், ஏறெடுத்து பார்க்கவில்லை. உள்வாங்கிக் கொள்ளவில்லை. தமிழகத்தில் காமராஜர் மட்டுமே இதுகுறித்து சிந்தித்தார். இதனை அமல்படுத்தினால் ஏழைகள் முன்னேறுவார்கள். இந்த நாடும் முன்னேறும் என்பதை தொலைநோக்கு பார்வையில் சிந்தித்ததோடு மட்டுமல்ல தமிழகத்தின் தலைசிறந்த கொடையாளராகவும், கல்வி வள்ளலாகவும் திகழ்ந்த டாக்டர் அழகப்ப செட்டியார் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து கட்டாய இலவச கல்வி வழங்குவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறு உத்தரவிட்டார் காமராஜர்.

அந்த குழு வழங்கிய அறிக்கை காமராஜருக்கு உற்சாகத்தையும், உந்து சக்தியையும் கொடுத்தது. அதன் அடிப்படையில் சிந்திக்கவும், செயல்படவும் மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றார் காமராஜர். அரசு பள்ளிகளை கவனிப்பது மட்டுமே அரசின் கடமை என்று எண்ணி இருந்திடாமல் தனியார் பள்ளிகளையும் ஊக்குவிக்க தவறவில்லை காமராஜர். அப்போது தனியார் உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 1,769 ஆக இருந்தன. இவற்றில் 9 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பெற்றனர்.

மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே முக்கியமல்ல, அவர்களுக்கு வழங்கப்படுகிற கல்வியின் தரம், அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்றும் சிந்தித்தார் காமராஜர்.

வேதங்களின் சிறப்பு கீர்த்தனைகளின் கீர்த்தி மனை சாஸ்திரம், ஜோசியத்தின் பெருமை என்றெல்லாம் சிந்திக்காமல், விஞ்ஞானம், பொறியியல், விவசாயம், நூற்பாலை தொழில் நுட்பம், கணக்கு, சமூகவியல் போன்ற வாழ்க்கையை மேம்படுத்தும் பாடங்களையே, பள்ளிகளில் இடம்பெறச் செய்தார் காமராஜர்.

இந்த பாடத்திட்டங்களை எல்லாம் வகுப்பதற்காக பிரபல கல்வியாளர்களாக திகழ்ந்திட்ட டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு குழுவையும் ஏற்படுத்தினார் காமராஜர். அவர்கள் கொடுத்த அறிக்கையினை ஆராய்ந்து பார்த்து அனைத்தையும் செயல்படுத்தினார்.

பள்ளிகளில் பாடம் நடத்துகிற ஆசிரியர் நன்கு பயிற்சி பெற்று வர வேண்டும் என்பதற்காக ஆசிரியர் பயிற்சி பள்ளிகளையும், பல்வேறு இடங்களில் ஏற்படுத்தினர் காமராஜர். 'கட்டாய இலவசக்கல்வி' என்ற திட்டத்தினை கையிலே எடுத்துவிட்டோம். அரசின் நிதிநிலைமையோ பெரிதாக இல்லை. ஆனால் இதனை மக்கள் நலன் கருதி நாட்டு நலன் கருதி நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருந்து நாளும் நாளும் சிந்தித்தார் காமராஜர்.

அதனுடைய விளைவுதான் இந்த கல்வித்திட்டத்தில் பொதுமக்களையும் பங்கேற்கச் செய்வது என்று முடிவு செய்தார் காமராஜர். அதன்படி ஒவ்வொரு ஊர் மக்களும் விருப்பமுள்ளவர்கள், வசதி வாய்ப்புள்ளவர்கள், தங்களால் இயன்ற உதவிகளை பள்ளிகளுக்கு வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின் மூலம் கரும்பலகைகள், மேஜைகள், நாற்காலிகள், கடிகாரங்கள், பணம் ரொக்கமாகவும், உதவிகள் வந்து குவிந்தன. சிலர் வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க முன்வந்தனர். சிலர் வாடகை பெறாமலேயே தங்கள் கட்டிடங்களை வழங்கினர். இதற்கு கிடைத்த மகத்தான ஆர்வம், பரவலாக பேசப்பட்டு மக்கள் இயக்கமாகவே இது மாறியது. இந்த பணியில் பங்கேற்று பணியாற்றுமாறு மாவட்ட கல்வி அதிகாரிகள் அனைவரும் அறிவுறுத்தப்பட்டனர்.

கவிஞர் இரவிபாரதி

 பள்ளிகளுக்கு வேண்டிய அடிப்படை தேவைகள், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகள் என்று மூன்றாக வகுக்கப்பட்டு, பட்டியல்கள் உருவாக்கப்பட்டு அதன்படி தேவையான பொருட்கள் எவை எவை என்று திட்டமிட்டு அறிவிக்கப்பட்டன. அதன்படி பொதுமக்கள் பங்கேற்கும் "பள்ளி வளர்ச்சித் திட்டம்" தமிழகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதுகுறித்து ஆங்காங்கே மாநாடுகளும் நடத்தப்பட்டன.

28.7.1958 அன்று நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நடைபெற்ற "பள்ளி வளர்ச்சித் திட்டம்" மாநாட்டில் 102 பள்ளிகள் பங்கேற்றன. அங்கு அப்போது முன் வைக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். மாநாட்டில் பெறப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் ஆகும். ஆக ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட தொகைக்கு இணக்கமாகவே பொருள்கள் குவிந்ததில் எல்லோருக்குமே மிகுந்த மகிழ்ச்சி. இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய முதல்-அமைச்சர் காமராஜர், இது பொதுமக்களின் சக்திக்கு உட்பட்டதுதான். "சுமை"அல்ல என்று உருக்கமாகவும், பொருட்களை வழங்கிய மக்களைப் வெகுவாகப் பாராட்டியும் நன்றியும் தெரிவித்துப் பேசினார்.

இதே போன்ற ஒரு மாநாடு 22.11.1958 அன்று செங்கல்பட்டு நகரத்திலே நடந்தபோது, அப்போது இந்தியக் கல்வி மந்திரியாக இருந்த கே.சி.பந்த் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார். இந்த மாநாட்டில் 826 பள்ளிகள் கலந்து கொண்டன. முன் வைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு 23 லட்சமாகும். இந்தத் தொகை அப்பகுதியில் உள்ள பொதுமக்களி டம் இருந்து, ரொக்கமாகவும், பொருட்களாகவும் வசூலிக்கப்பட்டு, தேவையான பள்ளிகளில் அவை சேர்க்கப்பட்டன.

இந்த மாநாட்டில் மத்திய மந்திரி கே.பி.பந்த் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார். இந்த மாநாட்டில் 826 பள்ளிகள் கலந்து கொண்டன. முன் வைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ. 23 லட்சமாகும். இந்தத் தொகை அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரொக்கமாகும், பொருட்களாகவும் வசூலிக்கப்பட்டு, தேவையான பள்ளிகளில் அவை சேர்க்கப்பட்டன.

இந்த மாநாட்டில் மத்திய மந்திரி கே.சி.பந்த் உரையாற்றும்போது, இந்தியாவிற்கே முன் மாதிரியான திட்டம் இது. பிற மாநிலங்கள் இதைப்பற்றி சிந்திக்காத வேளையில் காமராஜர் இதுபற்றி சிந்தித்து வெற்றி கண்டுள்ளார். இது எனக்கு மிக மிக வியப்பாக இருக்கிறது. நான் டெல்லி சென்றவுடன் இத்திட்டத்தின் பெருமையினை நமது பாரதப் பிரதமர் நேருவிடம் எடுத்துரைப்பேன் என்று சொல்லிச் சென்றார்.

அதன்படியே டெல்லி சென்றவுடன் நேருவைச் சந்தித்து காமராஜரின் கல்வி வளர்ச்சித் திட்டத்தின் மகத்துவம் பற்றி கே.சி.பந்த் எடுத்துக் கூறினார். ஏற்கனவே காமராஜர் மீது அதிக மதிப்புக் கொண்டிருந்த நேரு, நானும் இந்தத் திட்டத்தை நேரில் காண வேண்டும் என்று கூறி ஆவலுடன் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார்.

அதன்படி காரைக்குடி அருகே உள்ள ஆ.தெக்கூரில் 15.1.1959 அன்று நடைபெற்ற பள்ளி சீரமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, காமராஜரைப் பாராட்டிப் பேசினார் நேரு. இன்னும் இது போல் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து, திருநெல்வேலி மாவட்டம் அடைக்கலாபுரம் மாநாட்டிலும் கலந்து கொண்டு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துப் பேசினார் நேரு.

பாரதப் பிரதமரின் வருகையும், இந்தத் திட்டம் பற்றிய அவரது பாராட்டும், பட்டி தொட்டி எங்கும் பரவி, காமராஜர் எடுத்த முயற்சிகளுக்கு கை கொடுத்தது. அதனால் தான் அவரது ஆட்சிக் காலத்தில் இது போல 167 பள்ளிச் சீரமைப்பு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.

இரண்டு மாநாடுகளில் கலந்து கொண்டு டெல்லி சென்ற நேரு, முதல் காரியமாக இந்தத் திட்டத்தைப் பற்றி எல்லா மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியதோடு காமராஜரைப் பின்பற்றுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

காமராஜர் மேற்கொண்ட இந்தப் புரட்சிகரமான திட்டத்தின் பயனாக, 6 வயதில் இருந்து 11 வயது வரை பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 45 சதவீதத்தில் இருந்து அது 80 சதவீதமாக உயர்ந்தது. இளஞ்சிறார்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கிட்டால் 18 லட்சத்தில் இருந்து அது 47 லட்சமாக இருந்தது.

தொடக்கக் கல்வியிலும், உயர்நிலைக் கல்வியிலும் கவனம் செலுத்திய காமராஜர், கலைக்கல்லூரிகளையும் ஆங்காங்கே தோற்றுவித்தார்.

1957-ல் தொழிற்சங்க இயக்கு நரகத்தைத் தோற்றுவித்து அதன் மூலம், பாலிடெக்னிக்குகளையும் பொறியியல் கல்லூரிகளையும் தோற்றுவித்தார். 1954-ல் 9 ஆக இருந்த பாலிடெக்னிக்குகள் 1963-ம் ஆண் டில் 30 ஆக உயர்ந்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழிற்கல்வியில் சிறந்து விளங்குமாறு சென்னையிலும், மதுரையிலும் பெண்கள் பாலிடெக்னிக்குகள் தோற்றுவிக்கப்பட்டன.

பள்ளிகளைத் திறந்தால் மட்டும் போதுமா? மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கினால் மட்டும் போதுமா? இவற்றுக்கு அடிப்படை காரணமாக விளங்குவது கல்வியைப் பயிற்றுவிக்கும் ஆசிரியப் பெருமக்கள் தானே. மாணவர் நலனில் காட்டப்படும் அக்கறை உணர்வு பூர்வமாக இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு கற்றுத்தரும் ஆசிரியர்களின் மனநிறைவும் முக்கியமல்லவா என்று சிந்தித்து ஆசிரியர் நலன்காக்கும் மூன்று திட்டங்களை செயல்படுத்தினார் காமராஜர்.

அதன்படி நிரந்தர வைப்பு நிதி, ஓய்வுக்கால ஊதியம் இவற்றுடன் இணைந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்று 3 வகைத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆசிரியர்களின் சம்பளமும் கணிசமாக உயர்த்தப்பட்டது. ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் வழங்கப்பட்டது. அத்தோடு நில்லாமல் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதினை 55-ல் இருந்து 58 ஆக உயர்த்தவும் உத்தரவிட்டார் காமராஜர். "கல்விப் புரட்சி செய்த காமராஜர்" என்று ஒருவரியில் அவரைப் புகழ்ந்து பாராட்டுவதோடு நாம் நின்று விடுகிறோம். இந்தப் புரட்சியைச் செய்வதற்காக அவர் ஆற்றிய பணிகளின் பங்களிப்பு நம்மை மட்டுமல்ல உலகையே வியக்க வைக்கிறது.

அடுத்த வாரம் பார்ப்போம்.

Tags:    

Similar News