சிறப்புக் கட்டுரைகள்

அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் உருவானது எப்படி?

Published On 2024-12-10 09:13 GMT   |   Update On 2024-12-10 09:13 GMT
  • கால வெள்ளத்தில் சேயோன் என்ற முருகனின் பெயர் சேந்தனாக மாறி திருச்செந்தூருக்கு சேந்திபுரம் என்ற பெயர் உருவானது.
  • முருகப்பெருமானின் அருளைப் பெற உதவும் முதன்மையான ஆறு தலங்களாகக் கருதப்பட்டன.

சங்க காலத்துக்கும் முன்பிருந்தே திருச்செந்தூர் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகள் அலைவாய் என்ற பெயரில் அழைத்தனர். பிறகு சிந்துபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திருச்செந்தூர் மானியம் என்ற தல வரலாற்று சுவடியில் திருச்செந்தூரை சிந்து புரம் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

முருகன் சூரபத்மனை சம்காரம் செய்வதற்கு புறப்பட்டு வந்தபோது திருச்செந்தூர் கடலோரத்தில் படை வீடு அமைத்து தங்கினார். அந்த படை வீட்டை அவரது தளபதியான வீரபாகு அமைத்தார். இதனால் அந்த பகுதிக்கு வீரபாகு புரம் என்ற பெயரும் சில ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டது.

கால வெள்ளத்தில் சேயோன் என்ற முருகனின் பெயர் சேந்தனாக மாறி திருச்செந்தூருக்கு சேந்திபுரம் என்ற பெயர் உருவானது. சூரன் சம்காரம் செய்யப்பட்ட பிறகு முருகனது வெற்றியை குறிப்பிடும் வகையில் ஜெயந்திபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.

அதன் பிறகு முருகனின் சிவந்திமேனி தோற்றத்தைக் கொண்டு செந்திபுரம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆன்மாக்களின் உறைவிடம் என்பதையும் இந்த பெயர் குறிப்பதாக சொல்கிறார்கள். இதுதான் பிற்காலத்தில் செந்தில்ஊர் என்று மாறியது.

நாளடைவில் அது செந்தூர் என்று பேச்சு வழக்கில் நடைமுறைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் இறைவன் வீற்றிருக்கும் ஊர்களுக்கு முன்பு திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டதால் திருச்செந்தூர் என்று ஊரின் பெயர் மாறியது.

முருகன் அவதார நோக்கத்தை நிறைவேற்றிய இந்த ஊரை சங்க கால மக்கள் போற்றினார்கள். புலவர்கள் தங்களது பாடல்களில் இந்த தலத்தை பதிவு செய்தனர். இதன் மூலமாகத்தான் திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் ஒன்றாக மாறியது.

சங்க காலத்தில் வறுமையில் வாழ்பவர்கள் வள்ளல்களின் வீடுகளை தேடிச்சென்று உதவி பெறுவது வழக்கத்தில் இருந்தது.

ஏழ்மையில் இருப்பவர்களை வள்ளல்களின் வீடுகளுக்கு செல்லும் பாதையை சுட்டிக்காட்டி அவர்களை ஆற்றுப்படுத்தும் பழக்கம் சங்க கால மக்களிடம் இருந்தது.

ஆற்றுப்படுத்துதல் என்பது ஆறுதல் சொல்வதாகவும், வழிகாட்டுவதாகவும் அமைந்து இருந்தது. இதன் அடிப்படையில் சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்களுக்கு "ஆற்றுப்படை" என்றே பெயர் சூட்டப்பட்டது.

கடை தமிழ் சங்கத்துக்கு தலைவராக வீற்றிருந்த நக்கீரர் இதை அப்படியே பின்பற்றினார். முருகப்பெருமானின் அருள் பெற வேண்டுமானால் தமிழகத்தில் முருகப்பெருமான் எந்தெந்த ஊர்களில் சிறப்பாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் என்பதை அவர் பக்தர்களுக்கும், மக்களுக்கும் பட்டியலிட்டு வழிகாட்டினார்.

அதை அவர் பாடலாகவே எழுதினார். முருகப்பெருமானின் பக்தர்களுக்கு அது ஆற்றுப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததால் அந்த நூலுக்கு "திருமுருகாற்றுப்படை" என்ற பெயர் ஏற்பட்டது. அந்த நூலில் அவர் முருகனின் முக்கியமான தலங்களை வரிசைப்படுத்தி இருந்தார்.

அதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு தலங்கள் போற்றப்பட்டன. இந்த தலங்களில் நிகழ்ந்த முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் மக்களிடையே பிரபலமானது.

இந்த ஆறு ஆலயங்களும் ஆற்றுப்படை வீடுகள் என்று புகழ்பெற்றன. அதாவது முருகப்பெருமானின் அருளைப் பெற உதவும் முதன்மையான ஆறு தலங்களாகக் கருதப்பட்டன. நாளடைவில் அவை தமிழக மக்களின் பண்பாட்டு கோட்பாடுகளின் அடிப்படையில் 'அறுபடை வீடு' என்று மாறி போனது. நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் எந்த இடத்திலும் அறுபடை வீடு என்று முருகனின் தலங்களை வரையறுத்து குறிப்பிடவில்லை.

திருமுருகாற்றுப்படையில் அவர் முருகனின் சிறப்புகளையும், முருகனின் தோற்றத்தையும், முருகனின் திருவிளையாடல்களையும் வகைப்படுத்தி உள்ளார். திருமுருகாற்றுப் படையில் ஒன்று முதல் 77 வரை உள்ள வரிகளில் திருப்பரங்குன்றத்தின் அழகையும் முருகனின் தோற்றத்தையும் சொல்லி உள்ளார்.

78 முதல் 125 வரையுள்ள வரிகளில் திருச்செந்தூரில் முருகன் போர் கடவுளாக இருந்ததை வாழ்த்தி உள்ளார். அதோடு சண்முகபெருமானின் ஆறுமுகங்கள் மற்றும் 12 கரங்கள் பற்றி புகழ்ந்துள்ளார்.

125 முதல் 176 வரையுள்ள வரிகளில் பழனியில் மும்மூர்த்திகளும் வந்து முருகனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார். 177 முதல் 189-வரை உள்ள வரிகளில் சுவாமி மலையில் காணப்பட்ட வழிபாடுகள் பற்றி சுட்டிக்காட்டி உள்ளார்.

190 முதல் 217 வரையுள்ள வரிகளில் திருத்தணியில் முருகனின் குணம் பற்றி வரையறுத்துள்ளார். முருகன் ஆடிய ஆட்டங்கள் பற்றியும் அந்த வரிகளில் கூறப்பட்டுள்ளது.

218 முதல் 317 வரையுள்ள பாடல்களில் முருகனுக்காக நடத்தப்படும் சடங்குகள், அருள்கள் கூறப்பட்டுள்ளன. அதோடு பழமுதிர்சோலையின் சிறப்புகளையும் நக்கீரர் அந்த பாடல் வரிகளில் அழகாக விளக்கி கூறியுள்ளார்.

இவ்வாறு முருகன் வழிபாட்டுடன் அந்த காலத்தில் சிறப்பு பெற்ற இடங்களின் தன்மைகள் அங்கு நடக்கும் வழிபாடுகள் நக்கீரரால் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கப்பட்டன. இப்படி அவர் வரிசைப்படுத்தியதன் அடிப்படையில்தான் அறுபடை வீடு என்பது உருவானது.

திருச்செந்தூர் தலத்தில்தான் சூரபத்மன் சம்காரம் செய்யப்பட்டதால் அதை நக்கீரர் மிகச்சிறப்பாக போற்றி புகழ்ந்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆலயம் ஆற்றுப்படை வீடுகளில் முதன்மை பெற்று திகழ்ந்தது.

நக்கீரரை குருவாக ஏற்றுக்கொண்டு முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சென்று சேவை புரிந்த அருணகிரிநாதர் முருகர் மீது 1,311 திருப்புகழ் பாடல்களை பாடினார். அவரது பாடல்களை ஆய்வு செய்தால் அவரும் அறுபடை வீடு என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்று தெரிய வரும்.

6-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் தாங்கள் பாடிய பாடல்களில் முருகனை குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் எந்தஒரு இடத்திலும் அவர்களும் அறுபடை வீடு என்பதை குறிப்பிடவில்லை.

இதன் மூலம் நக்கீரர் உருவாக்கிய திருமுருகாற்றுப்படை நூலின் அடிப்படையில் கூறப்பட்ட ஆற்றுபடை வீடுகள் என்பதுதான் அறுபடை வீடுகளாக வரையறுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. திருச்செந்தூர் தலம் முருகப்பெருமான் படை வீடு அமைத்த ஒரே தலம் என்பதால் அது அறுபடை வீடுகளில் மிகுந்த சிறப்பை பெற்று தாமாகவே முதன்மை இடத்துக்கு வந்தது.

முருகப்பெருமான் வீற்றிருக்கும் இடங்கள் அறுபடை வீடுகளாக புகழ் பெற்ற பிறகுதான் தமிழகத்தில் சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும் பாடல் பெற்ற தலங்கள், 198 திவ்ய தேசங்கள், நவக்கிரக தலங்கள் என்றெல்லாம் பல்வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பரிகார தலங்கள், பிரார்த்தனை தலங்கள் என்றெல்லாம் ஆலயங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்னோடியாக அமைந்தது முருகனின் புகழ் பாடும் நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை நூல் ஆகும்.

திருமுருகாற்றுப்படையை அடிப்படையாக கொண்டு அதன் பிறகு வந்த சான்றோர்கள் அறுபடை வீடுகளின் சிறப்புகளை மேலும் மேம்படுத்தினார்கள். குறிப்பாக அறுபடை வீடுகளுக்கு சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றியெல்லாம் பல்வேறு சான்றுகளுடன் ஆதாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டனர்.

இதன் மூலம் ஒவ்வொரு படை வீட்டின் வழிபாட்டிலும் ஒவ்வொரு பலனை பெறலாம் என்ற கோட்பாடுகள் உருவானது. முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் வழிபட்டால் திருமண தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வழிபட்டால் எல்லா தோஷங்களும் விலகி நினைத்தது நடக்கும். தொடங்கும் செயல்களில் வெற்றி உண்டாகும். முருகன் குருவாக இருந்து வழிகாட்டுவார் என்பது ஐதீகம்.

மூன்றாவது படை வீடான பழனியில் வழிபட்டால் செல்வம் சேரும், நோய்கள் விலகும். நான்காம் படை வீடான சுவாமிமலையில் வழிபட்டால் கல்வியும், ஞானமும் மேம்படும். ஐந்தாம் படை வீடான திருத்தணியில் வழிபட்டால் திருமணம், குழந்தைபேறு கிடைக்கும்.

ஆறாம் படை வீடான பழமுதிர்சோலையில் வழிபட்டால் அறிவாற்றல் உண்டாகும். இப்படி அறுபடை வீடுகளின் சிறப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான மக்களின் சிந்தனையை கவருவதாக திருச்செந்தூர் படை வீடு அமைந்து இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் திருச்செந்தூர் தலத்தில் காலடி எடுத்து வைத்தால் தோஷங்கள் விலகும், வெற்றிகள் தேடி வரும் என்ற அபாரமான நம்பிக்கைதான். அதனால்தான் திருச்செந்தூர் நோக்கி உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த தலம் என்று உருவானதோ அன்று முதல் இன்று வரை பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. திருச்செந்தூருக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் முருகப்பெருமான் அற்புதங்கள் நிகழ்த்துகிறார்.

ஆதிகாலத்திலும் திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அந்த அற்புதங்களை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை பார்க்கலாம்.

Tags:    

Similar News