சிறப்புக் கட்டுரைகள்

உரிமைக்கு ஏங்கும் உலக மக்கள்!

Published On 2024-12-10 18:18 GMT   |   Update On 2024-12-10 18:18 GMT
  • 1948-ல் பன்னாட்டு மனித உரிமை சாசனம் வரையப்பட்டது.
  • மனிதன் தான் உலகின் சிறந்த ஆளுமை.

உணவின் அருமை பசியில் தெரியும். ஆமா, நிசந்தான்.

அப்படித்தான்... 'மனித உரிமைகளின் மகத்துவம், அது மறுக்கப்படும் போது தான் தெரியும்.

உலகின் பல நாடுகளில் இன்னமும் பல கோடி மக்கள் அடிப்படை உரிமைகள் ஏதும் இல்லாமல், அச்சத்துடன் கலவரத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் நாம் அனுபவிக்கும் சுதந்திரம், பல முன்னேறிய நாடுகளில் வாழும் மக்களுக்குக் கூடக் கிடைக்கவில்லை.

இன்று டிசம்பர் 10 - உலக மனித உரிமைகள் தினம்.

'யாரா இருந்தா எனக்கு என்ன.. இது என்னோட உரிமை... இதை யாரும் எனக்குத் தர வேண்டியது இல்லை... யாரும் என்கிட்ட இருந்து எடுக்கவும் முடியாது.. அப்படின்னு அடிக்கவே வந்தாலும் அசராம நிற்கிற நிறைய பேரை பார்த்திருப்போம்...

அவர்கள் தமது உரிமையை, சுதந்திரத்தை நல்லாத் தெரிஞ்சு வச்சுருக்குறது தான் அதுக்குக் காரணம்...

மனித உரிமைகள் தினம், உலகின் மிக அற்புதமான உலகளாவிய உறுதிமொழிகளில் ஒன்றான மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் (UDHR) ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

இனம், நிறம், மதம், பாலினம், மொழி, அரசியல் அல்லது பிற கருத்து, தேசிய அல்லது சமூக தோற்றம், சொத்து, பிறப்பு அல்லது பிற அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல்- இந்த முக்கிய ஆவணம் ஒரு மனிதனாக அனைவருக்கும் உள்ள, பிரிக்க முடியாத உரிமைகளை உள்ளடக்கியது.

விலங்கிலிருந்து மனிதனைப் பிரிப்பது ஆறாவது அறிவு மட்டுமல்ல; "அடிப்படை உரிமைகளும்" தான். யாருக்கு எப்படியோ, ஏழைகளுக்கான உரிமை இன்னும் சட்டப் புத்தகத்தில் மட்டுமேஇருக்கிறது! ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வரவே இல்லை என்பதே பலரின் ஏக்கமும், வருத்தமும்.

மனிதனாகப் பிறந்ததாலேயே கிடைக்கப் பெறும் நுட்பமான உரிமைகள் தான் மனித உரிமை.

இதை யாரும் யாருக்கும் தர வேண்டியது இல்லை;யாரும் யாரிடமும் கெஞ்சி மண்டியிட்டுப் பெறுவதும் இல்லை.

இது எல்லா மனிதருக்குமான நிபந்தனையற்ற, மாற்ற முடியாத மறுக்க முடியாத உரிமை.

மனித உரிமைகள் - நாட்டுக்கு நாடு வேறுபடுவது கிடையாது. ஓட்டுக்கு விற்கப்படுவதும் கிடையாது.

ஆர்.கலைச்செல்வி

இயற்கை உரிமைகள் (natural rights)

பிறப்புரிமைகள் - (Birth rights)

உள்ளார்ந்த உரிமைகள் (inherent rights)

அடிப்படை உரிமைகள் - (fundemental rights) ஆதார உரிமைகள் (basic rights)

என்று, பல பெயர்களில் வழங்கப்படும் மனித உரிமைகள், ஒவ்வொரு மனிதனின் தனித்தன்மைக்கான முகப்புரை. அரசியல் சாசனத்தின் காப்புரை.

மனிதனை மனிதன் விற்கவும் தடை...எந்த மனிதனையும் வதைக்கவும் சித்தரவதை செய்யவும் தடை...

சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம்..என்பதே இதன் தாரக மந்திரம்.

எந்த நபரையும் நியாயமற்ற முறையில் கைது செய்யவோ, நாடு கடத்தவோ, காவலில் வைக்கவோ முடியாது.

வேலை செய்யவும், கல்வி பெறவும் உரிமை. இன்னும் பலவாழ்வியல் உரிமைகளும் இதில் அடக்கம்.

அது என்ன வாழ்வியல் உரிமை?!

வாழணும்அதுவும் எல்லாரும் சமமாக வாழணும். அது மட்டும் போதுமா?சுதந்திரமா வாழணும்.

கருத்து சுதந்திரம்,சமயச் சுதந்திரம்..

இந்த உரிமை சாசன திறவுக் கோலால், மனிதன் தன்மானத் தோடும் சுதந்திரத்தோடும் வாழ முடியும் என்ற நிலை வந்தது.

இது ஒரு நாடு கொடுத்தது அல்ல.. இது பன்னாட்டு அமைப்பின் உரிமை சாசனம்.

யாரும் யாரிடம் இருந்தும் பறிக்க முடியாது; பிரிக்க முடியாது.

ஒன்றோடொன்று தொடர்புடைய உரிமைகள் இது.

அரசாங்கத்திடம் மனு போட்டு கேட்டுப் பெறுகிற விஷயம் இல்லை.

காற்றைப் போல, வெளிச்சத்தைப் போல, மனிதக் குடும்பத்தின் அங்கமாக இருக்கும் எந்த மனிதனுக்கும் தானாகக் கிடைக்க வேண்டிய உரிமைகள் இவை.

இத்தனை உத்திரவாதம் உள்ள மனித உரிமையை கொடுப்பதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.

ஆனால் இந்த மனித உரிமைகளைக் காப்பதற்காகவே..சட்டங்களும் ஆணையங்களும் இருக்கின்றன.

1948-ல் பன்னாட்டு மனித உரிமை சாசனம் வரையப்பட்டது. எல்லா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நாளை தான் (டிசம்பர் 10) மனித உரிமை தினமாக அனுசரித்தும் வருகிறோம்.

இந்தியத் திருநாட்டில் 1993-ம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் வழியே, தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டு மனித உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றன.

உரிமை மீறல், தட்டிக் கேட்கப்படுகிறது. எவரும் எந்நேரமும் மனித உரிமை சாசனத்திடம் எட்ட, ஏற்படுத்தப்பட்ட ஏணி இந்த மனித உரிமைகள் ஆணையம்.

அரசு அதிகாரிகள், காவல் துறையினரால் மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டால் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து பொதுமக்கள் தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கலாம். அல்லது செய்தித்தாளில் அல்லது ஊடகத்தில் வெளியாகும் மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திகளை கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்தும் உரிமைகளை மீட்டுத் தரலாம்.

பொதுமக்கள் புகார் மனு கொடுத்தால்... விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்கப்படும். மேலும் இழப்பீடு மற்றும் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

எதெல்லாம் மனித உரிமை மீறல்?

மருத்துவமனையில் சரியான சிகிச்சை கொடுக்காமல் இருப்பது...

சிகிச்சை பெற வருபவரைத் திட்டுவது...

போன் பேசிக் கொண்டே சிகிச்சை அளிக்க முற்படுவது... மனித உரிமை மீறல்தான்.

காவல் துறையைப் பொருத்தவரை... புகார் அளிக்கவோ அல்லது விசாரணைக்காகவோ வருபவர்களிடம் சட்டம் குறிப்பிடும் எல்லையைத் தாண்டி, முறைகேடாக நடத்துவது...

பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கி விடுவது... பயணிகளைத் தகாத வார்த்தையால் திட்டுவது...

காவல் நிலையத்தில் புகார் மனுவை வாங்காமல் பொதுமக்களை அலைக்கழிப்பது...

ரேஷன் கடையில் பொருட்களைத் தர மறுப்பது...

சிறைகளில் கைதிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது...

இலவச சட்ட உதவிகளை வழங்க மறுப்பதும்...

அரசு அலுவலகங்களாக இருக்கட்டும்...ஒரு குறிப்பிட்ட வேலைக்காக அல்லது சான்றிதழை பெறுவதற்காக ஒரு நபரை திரும்ப திரும்ப வரச் சொல்லுவதும்...

குறிப்பாக மாற்றுத் திறனாளிகளையும் வயதானவர்களையும் அதிகமான நேரம் காத்திருக்க செய்வதும் அலைக்கழிப்பதும் மனித உரிமை மீறலே!!

குறைவான ஊதியத்துக்கு அதிகமான வேலை வாங்குவதும் ...மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமையும் மனித உரிமை மீறலே!

2024 மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருள் "எங்கள் உரிமைகள், எங்கள் எதிர்காலம், இப்போ இருந்தே...'' என்று தொலைந்து போன புதைந்து போன உரிமைகளை மீண்டும் உயிரோட்டம் கொடுத்து கையில் எடுப்பதாக இந்த கருத்து அமைந்துள்ளதால்... ஏதோ ஒரு ஆறுதல் அனைவரின் மனதிலும் பற்றுகிறது.

மனித உரிமை ஆணையம் தலைநகரில் இருந்தாலும் அதன் நீதிபதிகள் மாநிலம் முழுவதும் சென்று குறைகளை நிவர்த்தி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.!

எப்படி புகார் அளிப்பது என்றால்...

இன்றைய சூழலில் ஒரு சாமானியனுக்கும் தெரியும், நேரடியாகவோ, பதிவுத் தபாலிலோ, அல்லது ஆன்லைன்' மூலமாகவோ கூட புகார் மனுவை ஆணையத்திடம் நேரடியாகதெரிவிக்க முடியும்.

வழக்கறிஞரே தேவையில்லை: ஆதாரங்களின் அடிப்படையில் புகார் மனுவை கொடுத்து தாமாகவே அந்த வழக்கை நேரடியாக நடத்திக் கொள்ளலாம்...

ஏன் இவ்வளவு வீரியம்?

மனிதன் தான் உலகின் சிறந்த ஆளுமை.

தனி ஒரு மனிதனுக்கு உரிமைகள் இல்லை என்றால்... இந்த ஜகமே அழிந்து விடும் அல்லவா...

ஆங்கிலேயர்களின் காலத்தில் உரிமைகள் இருந்தது. சுதந்திரம் இல்லை...இன்றைக்கு சுதந்திரம் இருக்கிறது. உரிமைகள் தான் இல்லை... என்பதும் பலரின் வருத்தமும் ஏக்கமுமாக இருக்கிறது என்பதும் உண்மைதான்...

அதற்குக் காரணம்... மனிதனுக்கு ஏற்ற உணவுகளைப் பற்றி சொன்ன அளவுக்கு எந்தத் தொலைக்காட்சியும் மனித உரிமைகளைப் பற்றி சொல்லவில்லையே...!!!

ஒரு நாய்க்கு அடிபட்டால் அதை பார்க்கும் நாய் இன்னொரு நாயை உதவிக்கு அழைக்கிறது...

ஒரு காக்கைக்கு சோறு வைத்தால் அந்த காகம் இன்னொரு காகத்தை பகிர்வுக்கு அழைக்கிறது...

ஆனால் ஒரு மனிதனுக்கு அடிபட்டால், ஒரு மனிதனின் உரிமைகள் மீறப்பட்டால், இன்னொரு மனிதர் facebook-ல் வாட்ஸ் அப்பில் பரப்புகிற காலம் இது...

காமக் கொடூரர்களும் பண முதலைகளும்மனித உரிமை என்ற போர்வைக்குள் புகுந்து கொள்ளுவதும் பெரும் கவலையே...

அகிலம் தழுவிய சாசனம் இருக்கிற போதிலும்... நாடு தழுவிய மனித உரிமை சட்டங்கள் இருக்கின்ற பொழுதிலும்..மாநிலம் தழுவிய ஆணையங்கள் செயல்படுகிற போதிலும்...

மனித உரிமைகளைக் காப்பதும் மீட்டெடுப்பதும் வளர்கிறதா அல்லது நசுக்கப்படுகிறதா... என்பது முற்போக்காளர்களின் வருத்தமே!

உலகமே எதிர்த்தாலும் உரிமைக்காக போராடுவோம்...!

உயிரைத் தந்தேனும், உரிமையைப் பெறுவோம்...!!!

Tags:    

Similar News