- உத்திர என்றால் அடுத்த என்று பொருள்.
- அனுஷ நட்சத்திர நாளில் லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
உத்திரம் 12-வது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசியிலும் 2 3, 4-ம் பாதங்கள் கன்னி ராசியிலும் அமைந்துள்ளது. இதன் அதிபதி சூரியன் ஆகும். இது வானத்தில் தொட்டில் போலவும், ஊஞ்சல் போலவும், நீண்ட கோல் போலவும் காணப்படும். சிம்ம ராசியிலும் கன்னிராசியிலும் வியாபித்து இருப்பதால் உத்திரம் ஒரு உடைந்த நட்சத்திரமாகும். சூரியனின் சுயவீடான சிம்மத்தில் இருப்பதால் இது சிறப்பான நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் நீர்நிலைகளாகும். உத்திரம் நட்சத்திரத்தின் முழுப் பெயர் உக்கிர பல்குணியாகும். உத்திர என்றால் அடுத்த என்று பொருள். பூர்வ பல்குணியின் மறுபகுதி அல்லது அடுத்த பகுதி உத்திர பல்குணியாகும். இதன் பொருள் சிறப்பானது என்பதாகும். இதன் வடிவம் தண்டம், கோல். உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதம் முதுகெலும்பு பகுதியையும், 2,3,4 பாதங்கள் குடல், சிறுநீர்ப்பை, கல்லீரல் ஆகிய பாகங்களையும் ஆளுமை செய்கிறது.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி சூரியன் என்பதால் நல்ல மன வலிமையும் ஆன்ம பலமும் நிறைந்தவர்கள். கம்பீரமான உடல்வாகு உண்டு. நல்ல புத்திக் கூர்மை கொண்ட நபர்களாகவும் இருப்பார்கள். உண்மையை மட்டும் பேசுவார்கள். வசீகர தோற்றம் இருக்கும். அனைவரையும் எளிதில் கவரக் கூடிய பேச்சாற்றல் நிறைந்தவர்கள். எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையாக இருப்பினும் தன்னுடைய நிலைமையில் இருந்து சற்றும் தடம் மாறாமல் சமாளிப்பார்கள். அனுபவ அறிவு அதிகமிருக்கும். ஆன்மீகம் போன்ற தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். யாரையும் அலட்சியம் செய்ய மாட்டார்கள். இவர்கள் மதப்பற்றும், தங்களது பண்பாடு, கலாசாரம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடும், நம்பிக்கையும் உடையவர்கள். பிறருடைய நிர்ப்பந்தங்களுக்காக எந்த ஒரு விரும்பாத செயலையும் செய்யமாட்டார்கள். இவர்களது பேச்சில் இறைவன், விதி, நியாயம் போன்ற வார்த்தைகள் அதிகம் காணப்படும்.
குறுக்குவழியில் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளத் தயங்குவார்கள். எந்த ஒருசெயலிலும் கட்டுப்பாடும், ஒழுங்கும் இருக்க வேண்டும் என்பார்கள். சுதந்திர எண்ணங்களும், அடுத்தவர்களை விட மேலே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகம் உண்டு. தங்களது விடாமுயற்சியும், சலியாத உழைப்பினாலும் எப்படியும் முன்னேறி விடுவார்கள். தங்களுடைய இயல்புக்கும், தகுதிக்கும் அப்பாற்பட்ட பதவியை அடைய விரும்ப மாட்டார்கள். அந்தஸ்து, கவுரவம் பார்ப்பதால், மற்றவர்களுக்குக் கடின மனத்தினர்கள் போல் தோன்றுவார்கள். இவர்களுக்குச் சமூகத்தில் நல்லவர், வல்லவர் என்ற பெயர் கிடைக்கும். அதனால் பண விஷயக்ளில் லாபத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்.
பொதுவாகப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இலக்கியங்களிலும் சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். அடிக்கடி சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். ஆன்மிகத்தில் நாட்டமுடையவர்களாக பொறியியல், இதயம், கண் சார்ந்த அறுவை சிகிச்சை மருத்துவம், சித்த மருத்துவம், சமூகவியல், நிர்வாகம் தொடர்பான கல்வி, மருத்துவம் தொடர்பான படிப்புகள், அரசியல், வனம் காடு இயற்கை தொடர்பான கல்விகள், பிபிஎம், பிபிஏ, எம்பிஏ, ஐ.ஏ.எஸ். போன்ற நிர்வாகம் தொடர்பான கல்வி கற்கலாம்.
மற்றவர்களை ஏமாற்றி, அதன் மூலம் வருமானம் பெற விரும்பமாட்டார்கள். ஆடிட்டர், கணக்காளர் போன்ற துறைகளில் சாதிப்பவர்கள். வங்கி அதிகாரி, பதிப்பகம், எழுத்துத் துறை, கணித மேதை, ஆராய்ச்சியாளர், விஞ்ஞானிகள், புதுவித மருந்துகளை கண்டுபிடித்தல், தூதரகப் பணி, தகவல் தொழில் நுட்பம், சங்கேத வார்த்தை நிபுணர், பண்டைய மொழி ஆராய்ச்சி, துப்பறிதல், பாரம்பரிய மருத்துவர், புதிய கண்டுபிடிப்புகள், கண்ணாடிகளில் புதுமை செய்தல், கதை கவிதை எழுதுதல், எவர் மனதையும் படிக்கும் ஹிப்னாடிசம், மனோதத்துவ மருத்துவர், பின்னணிப் பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட், இசைக் கருவிகள் வாசித்தல், மிமிக்ரி, ஆண்பெண் என குரல்வளம், இயற்கை ஆர்வலர் போன்ற துறைகளில் இருப்பார்கள்.
நுணுக்கமான திறமைகளை உடையவர்கள். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் பொருளாதாரத்தில் முன்னேற்றம், அரசாங்க ஆதரவு, தொழில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும். இவர்களுக்குப் பெரிய சிரமங்களும், துன்பங்களும் வராது. அப்படி வந்தாலும், வெகு நாட்கள் இருக்காது. வந்த சுக, துக்கங்கள் அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்வார்கள். காதல் விவகாரங்கள் இவருக்கு வெற்றியைத் தருவது இல்லை. தங்களது கலாச்சாரத்தை விட்டு வெளியே வரத் தயங்கு வார்கள். நல்ல வாழ்க்கைத் துணையை இயற்கையாகவே அமைத்து விடுவார்கள். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். வீண் செலவுகள் அதிகமாகச் செய்யமாட்டார்கள்.
தன்னலத்தை விட பிறர் நலத்தை பேணிக் காப்பார்கள். சிக்கனத்தைக் கையாள்பவராகவும், சுயமரியாதையும் கண்ணியமும் உடையவராகவும் இருப்பார்கள். இவர்களின் 30 வயதில் இருந்து இவர்களுக்கு செல்வாக்கு, செல்வம் சேரக்கூடியதாகவும், பூர்வீக சொத்துக்கள் வீடு, மனை, வண்டி, வாகனம் அமைய வாய்ப்புள்ளது.
தசா பலன்கள்: சூரிய தசா இதன் தசா வருடம் 6. இது ஜென்ம தாரையின் தசாவாகும். பிறந்த கால நட்சத்திர பாதத்திற்கு ஏற்ப மீதமுள்ள தசா வருடம் இருக்கும். செல்வ வளத்திற்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமி தாயார் பிறந்த நட்சத்திரம் என்பதால் இந்த உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இயல்பாகவே செல்வவளம் என்பது இருக்கும். பொருளாதாரக் கஷ்டம் என்பதே இருக்காது. இன்னும் சொல்லப்போனால் உத்திர நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அந்தக் குடும்பமே செல்வ கடாட்சம் மிக்க குடும்பமாக மாறும்.
சந்திர தசா: இதன் தசா ஆண்டுகள் 10. இது தன தாரையின் தசாவாகும். இந்த தசா காலம் முழுவதும் பள்ளி படிப்பில் கடந்து போகும். பெற்றோர்களுக்கு நல்ல பொருளாதாரம் சேரும். குழந்தைகளுக்கு சிறு சிறு உடல் நல பாதிப்புகள் இருக்கும். உடல் நல பாதிப்பால் கல்வி ஆர்வம் சற்று குறையும்.
செவ்வாய் தசா: இதன் தசா ஆண்டுகள் 7 இது விபத்து தாரையின் தசாவாகும். இந்த காலகட்டத்தில் பெற்றோரை பிரிந்து படிக்கலாம். 20 வயதை கடந்தவர்கள் தொழில் உத்தியோகத்திற்காக குடும்பத்தை பிரியலாம். சிலருக்கு இளம் வயதில் திருமணம் நடக்கும். சிலருக்கு இந்த காலகட்டத்தில் சொத்துக்களால் உடன் பிறந்தவர்களால் மன உளைச்சல் இருக்கும்.
ராகு தசா: இதன் தசா வருடம் 18. இது சேம தாரையின் தசாவாகும். சுய ஜாதகத்தில் ராகு நன்றாக இருந்தால் வாழ்வில் அடைய வேண்டிய அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பார்கள். தொழில், உத்தியோகம், குடும்ப முன்னேற்றத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார்கள். வீடு வாசல், திருமணம் என வாழ்வில் செட்டிலாகுவார்கள். பிரமாண்ட சுக போக வாழ்க்கை அமையும்.
செவ்வாய் தசாவில் திருமணம் நடந்த பலர் மறு விவாகத்தை சந்திப்பார்கள்.
குரு தசா: இதன் தசா வருடம் 16. இது பிரத்யக்தாரையின் தசாவாகும். இந்த காலகட்டத்தில் இவர்கள் முன்கோபத்தால் சின்ன சின்ன வாக்கு வாதங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பூர்வீக சொத்துக்கள் அதிகமாக இருந்தாலும், தன்னுடைய சொந்த முயற்சியால் வண்டி வாகனங்கள், வீடு மனை போன்றவற்றைச் சேர்ப்பார்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். சிறு சிறு நோய் தாக்கமும் மன நல பாதிப்பும் இருக்கும்.
சனி தசா: இதன் தசா ஆண்டுகள் 19. இது சாதக தாரையின் தசாவாகும். ஆனால் வயோதிகம் காரணமாக சிறப்பான பலன்களை அனுப விக்க முடியாது. இவர்களது உழைப்பினை எளிதான மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் நல்ல பெயர் பெறுவார்கள். தன்னம்பிக்கை குறையும். இதனால் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, முன்னேற வகையறியாது பலர் முடங்கிக் கிடப்பார்கள்.
உத்திர நட்சத்திரத்தின் சிறப்புகள்
இந்த நட்சத்திரத்தில் வீட்டிற்கு தேவையான கட்டில், மேஜை, நாற்காலி, போன்ற சொகுசு பொருட்கள் வாங்கலாம். இது சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்ற நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் விரதம் இருந்து மாலை நேரத்தில் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் ஆண்களுக்கு ஆண்மை குறைவு நீங்கும். வீட்டு விலங்கான நாய் வளர்க்க விரும்புபவர்கள் இந்த நட்சத்திர நாளில் நாய் வாங்கலாம். இந்த நட்சத்திர நாளில் ஆயுதம் பயிலலாம். காது குத்தலாம். இதன் வசிப்பிடம் நீர்நிலை என்பதால் கிணறு குளம் வெட்ட உகந்த நட்சத்திரமாகும். ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்து லக்னத்திற்கு கேந்திரத்தில் இருந்தால் ஜாதகம் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான்.
இதனை புத ஆதித்ய யோகம் எனலாம். ராசி சக்கரத்தில் சூரியனுடைய வீடான சிம்மத்தையும் புதனுடைய வீடான கன்னியையும் இணைக்கும் நட்சத்திரம் என்பதால் சுய ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் இல்லாதவர்கள் உத்திர நட்சத்திரம் வரும் நாளில் சங்கரன்கோவில் சென்று சங்கரநாராயணரை தரிசித்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். வித்யாரம்பம் சேர்வதற்கும் உகந்த நட்சத்திரமாகும். சூரியனின் அதி தேவதை சிவன். புதனின் அதி தேவதை விஷ்ணு. ஜென்ம நட்சத்திர நாளில் சிவனும் விஷ்ணுவும் இணைந்த அம்சம் சங்கர நாராயணர் என்பதால் சங்கர நாராயணர் வழிபாடு புத ஆதித்ய யோகத்தை வலுப்படுத்தும்.
நட்சத்திர பட்சி:கிளுவை
யோகம்:துருவம்
நவரத்தினம் : மாணிக்கம்
திசை : தெற்கு
பஞ்சபூதம் : நெருப்பு
அதிதேவதை: சூரியன்
நட்சத்திர மிருகம்: ஆண் எருது
நட்சத்திர வடிவம்: கம்பு, குச்சி
நன்மை தரும் நட்சத்திரங்கள் :
சம்பத்து தாரை: ரோகிணி, அஸ்தம், திருவோணம்
சேம தாரை : திருவாதிரை, சுவாதி, சதயம்
சாதக தாரை: பூசம், அனுஷம், உத்திரட்டாதி
பரம மிக்ர தாரை : பரணி, பூரம், பூராடம்
பொதுவான பரிகாரங்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
ஜென்ம நட்சத்திர நாளில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், பேனா வழங்கவும், கல்வி உதவித் தொகை வழங்குவதன் மூலமும் வாழ்வில் வெற்றி பெறலாம்.
சாதக தாரையான அனுஷ நட்சத்திர நாளில் லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
போன்: 98652 20406