- துறவு மேற்கொண்டால் அது மறுபிறவிக்கு சமானம் என்கிறது ஆன்மிகம்.
- ஸ்ரீதீர்த்தரின் தலையில் கைவைத்து ஆசி வழங்கிய மாயக் கண்ணன் மறுகணம் மாயமாய் மறைந்தே போனான்.
கிருஷ்ண லீலா தரங்கிணி என்ற தமது சமஸ்கிருத நூல் மூலம் பெரும் புகழ் பெற்றவர் கிருஷ்ண பக்தரான நாராயண தீர்த்தர். பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். `பாரிஜாத அபகர்ணம், ஹரிபக்தி கண்டர்ணவம்` ஆகிய இரு நாடகங்களையும் கூட எழுதியுள்ளார். அவரது வரலாறு சுவாரஸ்யமானது.
ஆந்திர மாநிலமான குண்டூரைச் சேர்ந்த வில்லத்தூர் கிராமம்தான் அவரது சொந்த ஊர். பின்னர் அவர் குடும்பத்தினர் தஞ்சாவூரை நோக்கி இடம் பெயர்ந்தனர்.
வேதங்களைக் கற்ற பண்டிதர் நாராயண தீர்த்தர். பற்பல மொழிகளைக் கற்றறிந்தவர். சங்கீதப் பயிற்சியும் உடையவர். அன்பான மனைவியோடு அவரது இல்லறம் சிறப்பாகச் சென்று கொண்டிருந்தது.
ஒருநாள் ஒரு பணியின் பொருட்டாக ஆற்றைக் கடந்து வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆற்றில் முழங்காலளவு கூட வெள்ளம் இல்லை. நடந்தே கடந்து விடலாம் என ஆற்றில் இறங்கி நடக்கலானார்.
ஆற்றின் நடுப்பகுதியில் நடந்து வரும்போது திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. விறுவிறுவென்று வெள்ளம் தலைக்குமேல் உயரத் தொடங்கியது.
நடுவழியில் அவரால் திரும்பவும் முடியவில்லை. எதிர்க்கரைக்குச் செல்லவும் முடியவில்லை. ஆற்றில் மூழ்கித் தம் உயிர் பிரியப் போகிறது என்று நினைத்தார்.
இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது?
அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. துறவு மேற்கொண்டால் அது மறுபிறவிக்கு சமானம் என்கிறது ஆன்மிகம். நாமும் துறவு மேற்கொள்வதாகச் சபதம் ஏற்போம். அப்போது அது மறுபிறவி என்பதால் இந்த பிறவி இக்கட்டு மறைய வாய்ப்பிருக்கிறது என நினைத்தார்.
`இப்போது உயிர் பிழைத்தால் துறவு மேற்கொள்வேன், இது சத்தியம்` என மனத்தில் உறுதி எடுத்துக் கொண்டார்.
என்ன ஆச்சரியம்! காட்டாற்று வெள்ளம் கிடுகிடுவென வந்தது போலவே கிடுகிடுவெனக் குறையத் தொடங்கியது. மறுபடியும் நதிநீர் முழங்கால் அளவே உள்ளதாக மாறியது.
அவர் பயணத் திட்டத்தைக் கைவிட்டு இல்லம் திரும்பினார். தான் துறவு மேற்கொள்ளச் சபதம் செய்து கொண்டதையும் இனி மனைவியோடு வாழ இயலாது என்பதையும் எப்படி மனைவியிடம் சொல்லி அவளை சமாதானப்படுத்துவது என அவருக்குத் தெரியவில்லை.
சற்று முன்னர்தான் ஒரு பணியின் பொருட்டாக அக்கரைக்குப் போகிறேன் என்றவர். சிறிது நேரத்திலேயே திரும்பி வந்து `இனி உன்னை நிரந்தரமாகப் பிரிந்து துறவு பூணப் போகிறேன்` என்றால் அந்த அதிர்ச்சியை அவள் எப்படித் தாங்குவாள்?
ஆனால் அவர் எதுவும் சொல்லாமலேயே அவரைக் கண்ட மனைவி திகைத்தாள். கண்ணீர் விட்டு அழலானாள். ஏன் அழுகிறாய் எனக் கேட்டார் தீர்த்தர்.
''சுவாமி! அழாமல் என்ன செய்வேன்? இப்படிக் காவி ஆடை, கையில் தண்டம், மொட்டைத் தலை என்று துறவுக் கோலத்தில் வந்திருக்கிறீர்களே?'' என்றாள் அவள்.
உயர்ந்த பத்தினி அவள். அவரின் இன்றைய தோற்றத்திலேயே அவரது நாளைய தோற்றத்தை அவளால் கண்டுணர முடிந்து விட்டது.
திகைப்படைந்த நாராயண தீர்த்தர், அவளை மெச்சினார்.
''நீ உயர்ந்த பெண்மணி என்பதற்கு என்னைப் பற்றி நீ முன்கூட்டியே பார்த்த அளவில் அறிந்துகொண்டதே உதாரணம். நான் இனித்தான் காவி ஆடை உடுத்தித் துறவு பூண வேண்டும். இதை எப்படி உனக்குத் தெரிவிப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன்.
தெய்வ சக்தி என்னைத் துறவியாகவே உன் கண்களுக்குக் காட்டி விட்டது. உன்மேல் கொண்ட வெறுப்போ கோபமோ அல்ல என் துறவுக்குக் காரணம். நான் இப்போதும் உன்னை நேசிக்கிறேன்.
வெள்ளத்திலிருந்து தப்பிப்பதற்காக இப்படி முடிவெடுத்தேன். இறைச் சக்தி என்னைத் தப்பிக்கச் செய்துவிட்டது. வெள்ளம் என் பிரதிக்ஞைக்குக் கட்டுப்பட்டே குறைந்தது என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
எனவே என் பிரதிக்ஞைப்படி நான் துறவு பூணாவிட்டால் கட்டாயம் எவ்விதத்திலாவது மரணம் என்னைத் தழுவும். நான் இறப்பதை விட துறவியாக உயிருடன் இருப்பது உனக்கு மகிழ்ச்சி தரும் அல்லவா? கண்ணீரைத் துடைத்துக் கொண்டு என்னைத் துறவு நெறிக்கு வழியனுப்பி வை.
மனிதர்கள் ஒவ்வொருவரும் பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சன்யாசம் என்ற நான்கு படி நிலைகளை வாழ்வில் கடந்தாக வேண்டும். அதுவே தர்ம நெறி.
எனக்கு கிரகஸ்தாசிரமத்தில் அதிக காலம் இருப்பது விதிக்கப்படவில்லை. ஆகையால் விரைவிலேயே சன்யாச ஆசிரமத்திற்குச் செல்கிறேன்.
நான் அடையப் போகும் புண்ணியத்தில் எல்லாம் உனக்கும் சம பங்கு உண்டு. மனைவியை வெறுத்துத் துறவு பூணுபவர்களே அதிகம். நான் உன்னை வெறுக்காமல் உன் அனுமதியோடு துறவு பூணுகிறேன் எனத் தன் நிலைப்பாட்டை விளக்கிச் சொன்னார் தீர்த்தர்.
வேறு வழியின்றி அவர் துறவு மேற்கொள்ளக் கண்ணீரோடு அனுமதி அளித்தாள் அவர் மனைவி.
அதன்பின் துறவியான நாராயண தீர்த்தர் பல திருத்தலங்களை தரிசித்தவாறே திருப்பதி வந்துசேர்ந்தார். அங்கேயே சிறிது காலம் தியானத்தில் ஆழ்ந்தார்.
அப்போது ஒருநாள் ஒரு சிறுவன் அவர்முன் தோன்றினான். அவன் கையில் ஏராளமான தின்பண்டங்கள். அவற்றை அள்ளி அள்ளிச் சாப்பிட்டவாறே அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
`யாரப்பா நீ?` என விசாரித்தார் தீர்த்தர்.
`என்னை மறந்துவிட்டாயே? நான்தான் உன் கூடப் படித்த கோபாலன்!` என்றான் சிறுவன். அதோடு விட்டானா? அவரது பள்ளிப் பருவ சம்பவங்கள் பலவற்றைக் கூறி நினைவு படுத்தினான்.
அவன் சொல்லும் சம்பவங்கள் எல்லாம் சரியாகவே இருந்தன. ஆனால் அவனோடு தான் படித்ததாக அவருக்கு ஞாபகமே இல்லை. திடீரென்று அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது.
`நீ என்னோடு படித்தாய் என்றால் உனக்கு இப்போது என் வயதல்லவா இருக்க வேண்டும்? நீ சிறுவனாக இருக்கிறாயே?` என்று கேட்டார்.
`நான் எப்போதும் இப்படியேதான் இருக்கிறேன்!` என்று புன்முறுவலுடன் பதில் சொன்னான் அவன். சிறுவனின் பேரழகும் அந்தப் புன்முறுவலின் பிரகாசமும் அவரை மயக்கின.
அவன்மேல் இன்னதென்றறியாத பாசம் தோன்றியது அவருக்கு.
"அதெல்லாம் இருக்கட்டும். இப்படி நிறையப் பலகாரம் தின்கிறாயே? வயிறு வலிக்காதா குழந்தாய்?'' என்று பாசம் பொங்கக் கேட்டார்.
அவனோ ''நான் நிறையச் சாப்பிட்டால் உனக்கு வயிறு வலிக்கும்!'' என்றான்.
''ஏன் அப்படி? '' என வியப்போடு கேட்டார்.
''ஏனென்றால் நான்தான் நீ. நீதான் நான்!' என்றான் அவன்! அவருக்குப் புரியவில்லை. `இப்போது பார். உனக்கு வயிற்றுவலி வந்திருக்குமே?` என்றான். அந்தக் கணமே அவருக்கு வயிறு வலிக்கத் தொடங்கிவிட்டது.
''உன் வயிற்றில் நான் கைவைத்தால் உன் வலி போய்விடும்!'' என்ற சிறுவன் அவர் வயிற்றில் கைவைக்க வந்தான். வந்திருப்பது கடவுள் கிருஷ்ணனே என்பது தீர்த்தருக்குப் புரிந்துவிட்டது.
''வலி இருந்தால் இருக்கட்டும். எனக்கு உன் ஆசி வேண்டும்!'' என சிறுவனின் வலக்கரத்தை இழுத்துப் பிடித்துத் தன் தலையில் வைத்துக் கொண்டார்.
ஸ்ரீதீர்த்தரின் தலையில் கைவைத்து ஆசி வழங்கிய மாயக் கண்ணன் மறுகணம் மாயமாய் மறைந்தே போனான்.
கிருஷ்ண தரிசனம் பெற்ற பரவசத்தில் தீர்த்தர் மனம் குளிர்ந்திருந்தது. ஆனால் அவர் வயிற்றுவலி அவரை விட்டபாடில்லை. அதுபற்றி அவர் வருந்தவும் இல்லை.
பின்னரும் பல இடங்களுக்கு யாத்திரை சென்றார். ஒருநாள் இரவில் கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் ஸ்ரீதீர்த்தர் சென்ற நேரம், வயிற்றுவலி பொறுக்க முடியாததாக ஆகிவிட்டது.
அருகில் ஆளரவமற்ற ஒரு கோயிலில் விநாயகர் மட்டும் தனிமையில் இருந்தார். விநாயகரின் தனிமையைப் போக்குபவர் போல, கோயிலின் உள்ளே சென்று அமர்ந்தவர், களைத்து உறங்கிவிட்டார்.
இப்போது கனவில் வந்தான் மாயக் கண்ணன்.
''நாளை காலை கண் விழித்தவுடன் முதலில் யாரைப் பார்த்தாலும் விடாமல் அவரைத் தொடர்ந்து செல். உன் தீராத வயிற்று வலி தீரும்!" என்று சொல்லி மறைந்துவிட்டான்.
அதிகாலையில் கண்விழித்த ஸ்ரீதீர்த்தர் கனவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார். திடீரென அவர்முன் ஒரு பன்றி செல்வது தெரிந்தது. அப்படியானால் இப்போது பன்றியையா தொடரவேண்டும்?
தீர்த்தர் அந்தப் பன்றியைப் பின்தொடரலானார். பன்றி சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு சென்று அருகே இருந்த பூபதிராஜபுரம் என்ற ஊரிலுள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நுழைந்தது.
இதென்ன, ஆலயத்திற்குள் பன்றி சர்வ சுதந்திரமாக உள்ளே நுழைகிறதே? வியப்போடு பின்தொடர்ந்து சென்றார். திடீரென வராகம் மறைந்துவிட்டது.
"வராக அவதார வடிவில் உன்னை இங்கே அழைத்து வந்தது நான்தான்!'' என்று அசரீரி ஒலித்தது. (வராகமாக - பன்றியாக - வந்து அருள் புரிந்ததால், பூபதிராஜபுரம் அதன்பின் வரகூர் என்றே வழங்கப் படலாயிற்று.
வரகூர் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் தீர்த்தரின் வயிற்று வலி முழுமையாக மறைந்தது.
கிருஷ்ணரின் லீலைகளைப் பாடல்களாகப் பாடலானார் தீர்த்தர். கண்ணனும் ராதையும் அவர் முன் தோன்றி அவரது பாடல்களுக்கு ஜல்ஜல் எனக் காலில் சலங்கைகள் கொஞ்ச நடனமாடினார்கள்.
அந்தப் பாடல்கள் தொகுக்கப்பட்டு 'கிருஷ்ண லீலா தரங்கிணி' எனப் பெயர் பெற்றன. வரகூரிலேயே வாழ்ந்து சித்தி அடைந்தார் மகான் ஸ்ரீநாராயண தீர்த்தர்.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com