- திருவண்ணாமலை தீபக் காட்சியை ஒவ்வோர் ஆண்டும் சிவ பக்தர்கள் கண்டு களிக்கிறார்கள்.
- பஞ்ச முக விளக்கு என 5 முகங்களைக் கொண்ட விளக்குகளும் உண்டு.
கார்த்திகைப் பண்டிகையின்போது நாம் தீபத்தை, அதாவது ஒளியை வழிபடுகிறோம். ஒளியை வழிபடுவதன் பின்னணி என்ன? நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்பவை ஐம்பூதங்கள்.
இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனதே உலகம். இவற்றில் நீரும் நெருப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பண்பைக் கொண்டவை. நீர் எப்போதும் மேலிருந்து கீழ்நோக்கித்தான் பாயும். ஆனால் நெருப்பு அப்படியல்ல. நெருப்பு எப்போதும் கீழிருந்து மேல்நோக்கித்தான் எரியும்.
ஒரு தீப்பந்தத்தைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் கூட, அதன் சுடர் மேல்நோக்கித்தான் எரியுமேயன்றிக் கீழ்நோக்கி எரியாது. நம் மனமும் உயர்ந்த எண்ணங்களோடு மேல்நோக்கிச் செல்ல வேண்டும் என்பதால்தான் நாம் அந்தப் பண்பைக் கொண்ட நெருப்பை வழிபடுகிறோம்.
ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகையைக் கொண்டாடி, அதன்மூலம் நம் மனம் மேலே மேலே உயர வேண்டும் என்பதை நமக்கு நாமே உறுதிப்படுத்திக் கொள்கிறோம். மனத்தின் தீய எண்ணங்களைக் கார்த்திகை நெருப்பில் தூசாக்கி எரித்து நம் மனத்தைப் புடம்போட்ட தங்கமாய் மாற்றிக் கொள்கிறோம். நெருப்பை வழிபடும் கார்த்திகை வழிபாடு, நம் மனத்தைக் கீழிருந்து மெல்ல முயன்று மேலே உயர்த்திச் செல்ல வேண்டும் என்ற நோ க்கத்தில் உண்டானதுதான்.
* கார்த்திகை நாள் பற்றிப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கார்த்திகை நாள் பல்வேறு சொற்களால் சுட்டப்படுகிறது. அளக்கர், அளகு, அறுவாய், ஆரல் போன்றவை கார்த்திகை நாளைக் குறிக்கும் சொற்களில் சில.
* இல்லங்களில் கார்த்திகை யன்று வரிசை வரிசையாக விளக்குகளை ஏற்றி வைத்து, வழிபடுவது கார்த்திகைப் பண்டிகைக் கொண்டாட்டங்களில் முக்கியமான ஒன்று. நூற்றுக்கணக்கான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு வீடும் தனிப்பொலிவுடன் திகழ்வது ஒரு கண்கொள்ளாக் காட்சி. கார்த்திகை இரவன்று தெருக்களில் நடந்து செல்லும்போது இரு பக்கத்து வீடுகளும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் காட்சியைக் கண்டு களித்துக் கொண்டே செல்லலாம்.
* பொங்கல் காலை நேரப் பண்டிகை. சூரியனைக் காலையில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். ஆனால் கார்த்திகையோ மாலை நேரப் பண்டிகை. கார்த்திகை வழிபாடு, கொண்டாட்டங்கள் அனைத்தும் மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெறுபவை.
ஐப்பசியில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்திற்குப் பிறகு கார்த்திகை மாதத்தில் கார்த்திகைப் பண்டிகை வருவதால், தீபாவளியன்று வெடிக்காமல் தேங்கிவிட்ட பட்டாசுகளை கார்த்திகையன்று வெடித்து குழந்தைகள் குதூகலம் அடைவார்கள்.
தீபாவளிக்கென்று வாங்கிய பட்டாசுகளில் சிலவற்றைக் கார்த்திகைக்கென்று தனியே கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்ளும் புத்திசாலிக் குழந்தைகளும் உண்டு. ஐப்பசிபோல் கார்த்திகை மாதத்தில் பட்டாசுகள் கடைகளில் வாங்கக் கிடைக்காது.
* சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவது கார்த்திகைப் பண்டிகை அன்றுதான். கோயிலின் முன்புறத்தில் பனையோலைகளால் கோபுரம் போல் கட்டி கார்த்திகை அன்று மாலை நேரத்தில் அதைக் கொளுத்துவது வழக்கம். சிவபெருமான் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்ததன் அடையாளமாக சொக்கப்பனை கொளுத்தப்படுவதாகவும் சொல்வதுண்டு.
சிவபெருமான் மன்மதனை எரித்த சம்பவம் காம தகனம் என்றே சொல்லப்படுகிறது. மானிடர்கள் தங்கள் மனத்தில் தோன்றும் காம உணர்வை முழுமையாகச் சுட்டெரிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் உருவகச் சடங்கே சொக்கப்பனை கொளுத்தும் சடங்கு.
சொக்கப்பனையின் சாம்பல் புனிதமானது, சக்தி நிறைந்தது என்று மக்களிடையே நம்பிக்கை உள்ளது. அதனால் குழந்தைகள் நெற்றியில் அவர்களின் ஆரோக்கியத்தை வேண்டியும் கர்ப்பிணிப் பெண்கள் நெற்றியில் சுகப் பிரசவத்தை வேண்டியும் இந்தச் சாம்பல் திருநீறாக இடப்படுவதுண்டு. சொக்கப்பனைச் சாம்பலை விளைநிலங்களில் தூவினால் பயிர்கள் நன்கு வளரும் என்றும் ஒரு நம்பிக்கை கிராம மக்களிடையே உண்டு.
* திருவண்ணாமலை என்ற புனிதத் திருத்தலத்தில், சிவபெருமானின் முடியைக் காணவேண்டி, படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மன் அன்னப்பறவையாகப் பறந்து மேலே மேலே சென்றார். சிவனின் அடியைக் காணும் எண்ணத்தில் வராக அவதாரமெடுத்து காத்தல் தொழிலைச் செய்யும் திருமால் பூமியைக் குடைந்து கீழே கீழே சென்றார்.
ஆனால் என்ன முயன்றும் இருவராலும் முழுமுதல் கடவுளான சிவபெருமானின் அடியையோ முடியையோ காண இயலவில்லை. அவர்கள் தங்கள் தோல்வியை உணர்ந்து சோர்ந்திருந்த வேளையில், சிவபெருமான் ஆகாயம் அளாவிய ஜோதி வடிவாக அவர்களுக்குக் காட்சி கொடுத்தார். மாலறியா நான்முகனும் காணா மலை என்று இச்சம்பவத்தைத் திருவெம்பாவையில் போற்றுகிறார் மாணிக்கவாசகர். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகையன்று திருவண்ணாமலையில் மலைமேல் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் தோன்றியது.
திருவண்ணாமலை தீபக் காட்சியை ஒவ்வோர் ஆண்டும் சிவ பக்தர்கள் கண்டு களிக்கிறார்கள். ஒரு மாபெரும் இரும்புக் கொப்பரையில் இந்த அண்ணாமலை தீபம் ஏற்றப்படும். பதினேழாம் நூற்றாண்டில் பிரதானி வேங்கடபதி ஐயர் என்பவர் திருவண்ணாமலை தீபத்திற்கு ஒரு மிகப் பெரிய வெண்கலக் கொப்பரை செய்துகொடுத்தார். பல்லாண்டுகள் அந்தக் கொப்பரையில்தான் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இருபதாம் நூற்றாண்டில் பற்பல பக்தர்கள் தந்த காணிக்கைகளால் ஒரு பெரும் இரும்புக் கொப்பரை செய்யப்பட்டது. அந்த இரும்புக் கொப்பரையில்தான் தற்போது தீபம் ஏற்றப்படுகிறது. பர்வத அரச குலத்தில் வழிவழி வருபவர்களே இந்தக் கொப்பரையை மலைமீது கொண்டு வைக்கும் உரிமை பெற்றவர்கள். மூவாயிரம் கிலோ நெய்யும் திரியாக ஆயிரம் மீட்டர் காடா துணியும் அண்ணாமலையில் தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் அண்ணாமலை தீப தரிசனத்திற்குக் கூடும் பக்தர்கள் கூட்டம் பிரமிக்க வைப்பது. லட்சக்கணக்கான பக்தர்களின் மனம்கவர்ந்த விழாவாக அண்ணாமலை கார்த்திகை தீப விழா விளங்குகிறது.
* கார்த்திகை அன்று ஏற்றப்படும் விளக்குகளில் பற்பல வகை உண்டு. மண்ணால் ஆன அகல் விளக்குகள் தவிர வெண்கலம், வெள்ளி போன்ற உலோகங்களால் ஆன விளக்குகளும் ஏராளம் உண்டு. அன்னவிளக்கு, மயில் விளக்கு, கிளி விளக்கு எனப் பறவைகளை முகப்பில் தாங்கி ஒளிவீசும் விளக்குகள் உண்டு. காமாட்சி அம்மனின் திருமுகத்தைத் தாங்கிய காமாட்சி விளக்குகள், ஒரு பெண் கையில் விளக்கேந்தி நிற்பதைப் போன்ற தோற்றத்தில் அமைந்த பாவை விளக்குகள் என்றிப்படி விளக்குகள் பல வகை. பாவை விளக்குகளில் உண்மையாக ஒரு பெண்ணே கையில் விளக்கு வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்தில் மாபெரும் விளக்குகள் சில ஆலயங்களில் உள்ளன. பஞ்ச முக விளக்கு என 5 முகங்களைக் கொண்ட விளக்குகளும் உண்டு.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களும் இறைச் சிந்தனையால் தூண்டப்பட்டு ஆற்றல் பெற வேண்டும் என்பதே பஞ்சமுக விளக்குகளின் தத்துவம். ஆலயங்களிலோ வீட்டின் பூஜை அறையிலோ இடைவிடாமல் எரியும் விளக்குகள் வைப்பதுண்டு. குறிப்பிட்ட தினங்களில் இரவும் பகலும் இந்த விளக்கின் தீபம் ஒளிவீசிக் கொண்டே இருக்கும். அந்த தீபம் அணையாதவாறு அடுத்தடுத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருப்பார்கள்.
ஆலயங்களில் ஏற்றப்படும் இத்தகைய அணையா விளக்குகளை நந்தா விளக்கு என்பார்கள்.
பண்டிகைக் காலங்களில் ஏற்றப்படும் இத்தகைய நிகழ்வு அகண்ட தீபம் ஏற்றல் என வழங்கப்படுகிறது. விளக்குகளில் சிறப்பான ஒரு வகை குத்துவிளக்கு. கீழே ஆசனம், நடுப்பகுதியில் தண்டு, மேலே எண்ணெய் ஊற்ற அகல் என மூன்று பகுதிகளைக் கொண்டு அமைவதே குத்து விளக்கு. இந்தப் பகுதிகள் முறையே பிரம்மா, திருமால், சிவன் மூவரையும் குறிப்பதாகச் சொல்வார்கள்.
மும்மூர்த்திகளையும் ஒரே வடிவில் தாங்கியிருப்பதால் குத்துவிளக்கு சிறப்பான விளக்காக மதிக்கப்படுகிறது. மாவினால் விளக்கு போலச் செய்து அதில் நெய்யூற்றித் திரியிட்டு விளக்கேற்றுவதை மாவிளக்கு ஏற்றுதுல் எனச் சொல்கிறார்கள்.
இல்லங்களில் மங்கல நிகழ்வுகள் நடப்பதற்கு முன் குல தெய்வத்தை மாவிளக்கு ஏற்றி வழிபடும் மரபு பல குடும்பங்களில் இன்றும் இருக்கிறது. ஆலயங்களிலும் இல்லங்களிலும் தெய்வத்தின்முன் விளக்கேற்றி வழிபடுவது ஒருபுறம் இருக்க, விளக்கையே தெய்வமாகக் கருதி வழிபடும் வழக்கமும் இருக்கிறது. விளக்கையே மலர்களால் அர்ச்சனை செய்து, விளக்கிற்கே கற்பூர ஆரத்தி காட்டி வழிபடும் வழக்கமும் அன்பர்களிடையே உண்டு. சில துறவியர் துனி என்று வழங்கப்படும் நெருப்பைக் கொண்டு ஒரு சடங்கை மேற்கொள்கிறார்கள்.
விவேகானந்தர் போன்றோர் கூட இந்தச் சடங்கை நிகழ்த்தியதாக அவர் வரலாறு தெரிவிக்கிறது. நெருப்பை மூட்டி அதில் மனத்தின் தீய உணர்வுகளை பாவனையாக அர்ப்பணித்து மனத்தை முற்றிலும் தூய்மையானதாக ஆக்கிக் கொள்வதே இந்தச் சடங்கின் நிகழ்வு. கார்த்திகையில் சிறப்பாக நெருப்பை நாம் வழிபட்டாலும், எல்லாக் காலத்திலும் நம் ஆன்மிக மரபில் நாம் நெருப்பையே வழிபடுகிறோம். வேள்விச் சடங்குகள் முழுவதும் நெருப்பை ஆதாரமாகக் கொண்டவையே. ஒவ்வொரு சடங்கிலும் நாம் நிகழ்த்தும் ஹோமம் எனப்படும் புனித வேள்வி, அக்கினி இல்லாமல் நடைபெறாது. கார்த்திகைப் பண்டிகையில் இறைச் சக்தியை ஒளி வடிவில் வழிபடுவோம். நம் மனத்தின் தீய உணர்வுகளை நெருப்பில் எரித்து மனத்தைத் தூய்மையானதாக மாற்றிக் கொள்வோம். ஒளியை வழிபடு வதன் மூலம் நம் வாழ்க்கை ஒளி பொருந்தியதாக ஆகட்டும்.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com.