தேச பாதுகாப்பு சேவையில் முப்படை வீரர்களின் தியாகம்!
- பல்வேறு நிர்வாக அலகுகள் மூலம் நாடு முழுவதும் வசூலித்து நிர்வகிக்கிறது.
- வெளிநாடு வாழ் இந்தியர்களும் பெருமளவில் இதில் பங்களிக்கிறார்கள்.
இந்தியாவின் இறையாண்மையை காப்பதிலும் சர்வதேச எல்லைகள் மட்டுமல்லாது நம் நாட்டினுள்ளேயும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணிக் காப்பதிலும் முக்கிய பணியாற்றுவது பெருமைக்குரிய நம் இந்திய ஆயுதப் படைகள்.
இந்தியாவின் ராணுவப்படை உலகிலேயே இரண்டாவது பெரிய படையாகும். மிகப்பெரிய தன்னார்வப் படை கொண்ட நாடு என்ற பெருமையும் நமக்கு உண்டு.
முப்படைகளையும் சேர்ந்த 14 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் நேரடியாக களத்தில் நமக்காக, நம் தேச நலனுக்காக சேவையாற்றி கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய பெருமை கொண்ட நம் நாட்டின் படைகளில் தேசப்பற்று கொண்டு, தங்களை தாய் மண்ணிற்காக அர்ப்பணித்து, உலகளவில் நம் தேசியக் கொடிக்கு புகழ் சேர்க்கும் நம் வீரர்களின் தியாகத்தை போற்றி அவர்களை நினைவு கூறும் நாள் டிசம்பர் 7.
நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நம் தேசம் காக்கும் பணிக்கு தங்களை அர்ப்பணித்து கொண்ட ராணுவ வீரர்களின் மேம்பாட்டிற்காக, போரில் காயமுற்று உடல் உறுப்புகளை இழந்த நம் ராணுவச் சகோதரர்களின் மறுவாழ்விற்காக, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த நம் வீரர்களின் குடும்பத்திற்காக இந்திய அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவானது. அதன் அடிப்படையில் 1949 ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்பு அமைச்சர் பல்தேவ் சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஏழாம் நாள் ஆயுத படைகளின் கொடி நாள் அனுசரிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதன் முக்கிய நோக்கமே நாட்டைக் காக்க தம் பெற்றோரையும், உற்றோரையும், பாசமிகு பிள்ளைகளையும் பிரிந்து கடுமையான சூழலில் போராடும் நம் படை வீரர்களை போற்றவும், உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களை காக்கும் கடமை நம்முடையது என்ற உணர்வை வெளிப்படுத்துவதற்கும் தான்.
அன்றைய நாள் பொது மக்களிடம் சிறிய கொடிகளை கொடுத்து, அதற்கு பதிலாக நன்கொடைகளை பெறுவது வழக்கம். இப்படி பெறப்படும் நன்கொடையானது உயிரிழந்த படைவீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளின் நலனுக்காகவும், போரில் காயமுற்று உடல் உறுப்புகளை இழந்த படை வீரர்களின் மறுவாழ்விற்காகவும், அவர் தம் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கும் தொடர்ந்து செலவிடப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முன்னாள் படை வீரர்களிடையே உரையாற்றிய போது நம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார்,
"மக்களின் வரிப் பணம் படை வீரர்களை சென்றடைவது என்பது சட்டப்பூர்வ கடமை போல ஆகிவிடுகிறது. ஆனால், தன்னார்வங் கொண்டு செய்யும் பங்களிப்புகள் அப்படி அல்ல. வரியாக பெறப்படும் 100 ரூபாயை காட்டிலும், மக்கள் தாமாக மனமுவந்து வழங்கும் 5 ரூபாய் ஒரு படை வீரனின் மனதில் அதிக பிணைப்பை ஏற்படுத்தும்."
கொடி நாள் நிதி ஆண்டு தோறும் பெறப்படுவதன் முக்கிய காரணத்தை எளிதாக இப்படித்தான் விளக்க முடியும்.
நாட்டின் நிலப்பகுதி எல்லைகளை, பரந்த கடல்பரப்பை, நீண்ட நெடிய வான் பகுதிகளை பாதுகாக்கும் நம் முப்படை சகோதரர்களுக்கு, அவர்களின் நலனிலும், அவர்களின் குடும்ப நலனிலும் இந்திய மக்களாகிய நாம் அக்கறை கொண்டுள்ளோம் என்பதை உணர்த்தும் முக்கியமான நாள் இந்த கொடி நாள்.
இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகிய மூன்று பிரிவுகளும் தங்கள் திறனை வெளிப்படுத்தும் விதமாக இந்த நாளில் பொதுமக்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன.
1949-லிருந்து வெவ்வேறு பெயர்களில், பிரிவுகளில் இந்த கொடி நாள் நிதி முன்பு பெறப்பட்டு வந்தது. 1993-ஆம் ஆண்டு முதல் அவை அனைத்தையும் ஒன்றிணைத்து ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதியம் என்ற அமைப்பு நிறுவப்பட்டது.
இதில் பெறப்படும் நிதியை பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் கேந்திரிய சைனிக் வாரியம் தனது பல்வேறு நிர்வாக அலகுகள் மூலம் நாடு முழுவதும் வசூலித்து நிர்வகிக்கிறது.
கொடி நாள் அன்று பெறப்படும் நன்கொடைகளுக்கு ஈடாக கேந்திரிய சைனிக் வாரியம் முப்படைகளின் சேவைகளைக் குறிக்கும் வகையில் கொடிகளை வழங்குகிறது. சிவப்பு, கடற்படை நீலம் மற்றும் வெளிர் நீல வண்ணங்கள் கொண்ட அந்த கொடி நமது ராணுவம், கடற்படை மற்றும் வான்படைகளின் பெருமையை பறைசாற்றும் வகையில் இருப்பது சிறப்பு.
ஆயுத படைகள் என்றதுமே நம் நினைவுக்கு வருவது நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்கள் மட்டுமே. உண்மையில் நம் ராணுவம் சர்வதேச எல்லைகளுக்கு அப்பாலும் திறன்பட செயல்பட்டு கொண்டிருக்கிறது. நம் முப்படைகள் எங்கெல்லாம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது தெரியுமா?
ஜம்மு காஷ்மீரில் இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதி, இந்தியாவை சீனாவில் இருந்து பிரிக்கும் லடாக் பகுதி, இந்திய-வங்கதேச எல்லை, இந்திய-நேபாள எல்லை, இந்திய-மியான்மர் எல்லை போன்ற சர்வதேச எல்லைகளில் நிலைநிறுத்தப்படுகிறது.
எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ஜம்மு காஷ்மீர் காவல் படை, சஷாஸ்த்ரா சீமா பால், அசாம் ரைபிள்ஸ் போன்று பல்வேறு பிரிவுகளில் நம் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கை, நக்சல் பாதித்த பகுதிகளை கட்டுப்படுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் எந்த பகுதியிலும் வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம் ஏற்படும் போதும், மருந்து மற்றும் உணவு பொருட்களை கொண்டு சேர்ப்பதிலும் நம் விமான படையின் பங்கு அளப்பரியது.
ராணுவ படைகளின் ஆயுத பலம், இயற்கை வளங்கள், தளவாட உற்பத்தியில் தற்சார்பு, பாதுகாப்பு துறைக்கான நிதி மேலாண்மை மற்றும் அது சார்ந்த தொழிற்சாலைகள் போன்ற 50 காரணிகளை மதிப்பீடு செய்து வழங்கப்படுவது உலகளாவிய பயர்பவர் குறியீடு. இந்த குறியீட்டின்படி அமரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்த படியாக நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா.
மலை சிகரங்களை எட்டும் சாலைகள், அவற்றை குடைந்து அமைக்கப்படும் சுரங்க பாதைகள், கடலுக்கு மேலே ரெயில்வே மேம்பாலம், அசாதாரண நிலப்பரப்புகளில் தொலை தொடர்பு சேவைகள் என நம் நாட்டை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும் அனைத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களும் நம் போர் படைகளின் துணை கொண்டே நிறைவேற்றப்படுகிறது.
அண்மையில் நாட்டையே உலுக்கிய கேரளா வயநாடு நிலச்சரிவில் நம் முப்படைகளின் பணிகள் நம் அனைவரையும் நெகிழச்செய்தது. மீட்பு, உணவு மற்றும் மருந்து பொருட்களை கொண்டு சேர்த்தல், கனமான மீட்பு எந்திரங்களை பாதித்த பகுதிகளுக்கு கொண்டு சேர்த்தல் போன்றவற்றில் ராணுவ பாணியில் துரித நடவடிக்கை மேற்கொண்டது சர்வதேச கவனத்தை ஈர்த்தது.
இதில் மிக முக்கியமாக நம் நினைவில் நிற்பது, வெறும் 31 மணி நேரத்தில், 140 இந்திய ராணுவ வீரர்கள் 120 அடி நீளம் கொண்ட பெய்லி பாலத்தை கட்டியமைத்து வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலா பகுதிகளை இணைத்தது தான். இயற்கையின் சீற்றத்தை எதிர்த்தும் களத்தில் நமக்காக நம் சகோதரர்கள் துணித்து நிற்பார்கள் என்பதற்கு இதுவே அண்மை சாட்சி.
கொடி நாள் நிதிக்காக பொது மக்கள் மட்டுமல்லாது, பொதுத் துறை நிறுவனங்கள், பெரும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் என எல்லோரிடம் இருந்தும் பங்களிப்புகள் ஏற்கப்படுகின்றன. வெளிநாடு வாழ் இந்தியர்களும் பெருமளவில் இதில் பங்களிக்கிறார்கள்.
இதற்கான நன்கொடையை மக்கள் எளிதாக செலுத்துவதற்காக பல தளங்கள் இப்போது ஏற்படுத்தப் பட்டிருக்கிறன. வங்கி மூலமாகவோ, வரைவோலை, காசோலை, இணையம் வழியாகவோ இதற்கான நிதியை நாம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
கியூ.ஆர்.கோடு, ஏ.டி.எம். மூலமோ கூட நம்மால் இந்த நன்கொடையை செலுத்த முடியும். இதற்காக பிரத்யேகமான மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சுலபமாக கைபேசியின் உதவி கொண்டே கொடி நாள் நிதியை செலுத்திவிட முடியும். இந்த செயலி மூலம் நன்கொடை அளித்ததற்கான சான்றிதழையும் பெற்று கொள்ளலாம்.
தேசிய விழாக்களின் போதும், சர்வதேச அரங்குகளிலும், விளையாட்டு நிகழ்வுகளிலும் நம் தேசிய கீதம் இசைக்க, நம் மூவர்ணக் கொடி மெல்ல மெல்ல உயர பறக்கவிடப்படும் போது சில நொடிகள், "பெருமை கொண்ட பாரதத்தின் குடிமகன் நான்" என்ற கர்வம் நம்மையும் அறியாமல் நம்மை தலை நிமிரச்செய்யும். அந்த சிலிர்ப்பை, வீறிட்டு எழும் அந்த தேசப்பற்றை சில நிமிடங்களில் இயல்பாய் கடந்து விடுகிறோம் நாம்.
ஆனால், அதே உணர்வை தம் மனதிலிருத்தி, வேறூன்றச் செய்து, உடலாலும் உள்ளத்தாலும் நம் தாய் மண்ணை காக்க வேண்டி கடைசி மூச்சையே அர்ப்பணிக்க துணிந்தவர்கள் நம் படை வீரர்கள். தியாகத்தின் சின்னங்களாய் விளங்கி, நம்மை காக்கும் படை வீரர்களை இந்த நாளில் நன்றியுடன் போற்றி வணங்குவோம்.
rightwrite1214@gmail.com