இங்கிலாந்துடன் 20 ஓவர் போட்டி- இந்தியாவின் அதிரடி நீடிக்குமா?
- சேப்பாக்கத்தில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான கோலாகலத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
- சேப்பாக்கம் மைதானத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச 20 ஓவர் போட்டி நடக்கிறது.
சென்னை:
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (25-ந் தேதி) நடக்கிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக் ஷர் படேல் ஆகியோர் நேர்த்தியாக பந்துவீசினார்கள். அபிஷேக் சர்மா அதிடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் கடந்த போட்டியை போலவே 3 சுழற்பந்து வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கும்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து விமர்சனம் எழுந்தது. நாளைய போட்டியிலும் அவர் இடம்பெறுவாரா? என்பது உறுதி இல்லை. ஒருவேளை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் ரவி பிஷ்னோய் கழற்றி விடப்படலாம்.
இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. கேப்டன் பட்லர் ஒருவரே கடந்த போட்டியில் சிறப்பாக ஆடினார். மற்ற வீரர்களின் பேட்டிங் எடுபடவில்லை. பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் நேர்த்தியாக வீசக்கூடியவர்.
சேப்பாக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்த கடுமையாக போராடும். அந்த அணி வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.
சேப்பாக்கம் மைதானத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச 20 ஓவர் போட்டி நடக்கிறது. கடைசியாக 2018 நவம்பர் 11-ந்தேதி நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்தது. கடைசியாக இங்கு இந்தியா-வங்காளதேச அணிகள் மோதிய டெஸ்ட் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சேப்பாக்கத்தில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான கோலாகலத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது .
இரு அணிகளும் நாளை மோதுவது 26-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 25 ஆட்டத்தில் இந்தியா 14-ல், இங்கிலாந்து 11-ல் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்ஷர் படேல் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்குசிங், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ் தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஹர்சித் ராணா, முகமது ஷமி.
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில்சால்ட், பென் டக்கெட், ஹேரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெதல், ஒவர்டன், அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க்வுட், ஜேமி சுமித், பிரைடன் கேர்ஸ், ரெகான் அகமது, சகீப் மகமூத்.