ரஞ்சி கோப்பை: இரு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆகி வெளியேறிய ஷிவம் துபே
- முதல் இன்னிங்ஸில் ஷிவம் துபே டக் அவுட் ஆனார்.
- மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதில் மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரஹானே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதன் காரணமாக போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை சார்பில் ஷர்துல் தாக்கூர் மட்டும் 51 ரன்களை எடுத்தார். இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 206 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில், அடுத்து மும்பை அணி இன்று இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கியது. மும்பை அணிக்கு துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஜோடி முறையே 26 மற்றும் 28 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் தமோர், ஸ்ரேயஸ் அய்யர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரஞ்சி கோப்பை தொடரின் இரண்டு இன்னிங்ஸிலும் ஷிவம் துபே டக் அவுட் ஆகியிருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.