கிரிக்கெட் (Cricket)

வீடியோ: சேப்பாக்கத்தில் 2-வது டி20 போட்டி: சென்னை வந்த இந்தியா- இங்கிலாந்து வீரர்கள்

Published On 2025-01-23 18:19 IST   |   Update On 2025-01-23 18:19:00 IST
  • இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடக்கவுள்ளது.
  • இந்தியா- இங்கிலாந்து அணி வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர்.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தப்போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் இன்று மாலை சென்னை வந்தனர். நாளை முதல் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இந்தப்போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக பட்ச டிக்கெட் விலை ரூ.15 ஆயிரமாகும். டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு 20 ஓவர் ஆட்டம் நடக்கிறது. கடைசியாக 2018 நவம்பர் 11-ந்தேதி நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்தது. கடைசியாக சேப்பாக்கத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

Tags:    

Similar News