அபிஷேக் சர்மா அதிரடி: முதல் டி20 போட்டியில் இங்கிலாந்தை ஊதித் தள்ளியது இந்தியா
- முதலில் ஆடிய இங்கிலாந்து 132 ரன்களில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து வென்றது.
கொல்கத்தா:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி ரன் குவிக்க தவறியது. கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டும் சிறப்பாக ஆடி 44 பந்தில் 68 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்தியா சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 26 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து இறங்கிய திலக் வர்மா அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்து சென்றது.
3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 79 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் 34 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 79 ரன் குவித்தார்.
இறுதியில் இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.