கிரிக்கெட் (Cricket)

கொல்கத்தா டி20: இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 132 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து

Published On 2025-01-22 20:47 IST   |   Update On 2025-01-22 20:47:00 IST
  • வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
  • பட்லர் மட்டும் தாக்குப்பிடித்து 68 ரன்கள் விளாசினார்.

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

பில் சால்ட், பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பில் சால்ட் ரன்ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் அட்டமிழந்தார்.

அடுத்து ஜாஸ் பட்லர் களம் இறங்கினார். 3-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் டக்கெட் 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து ரன் குவிக்க தவறியது. கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டும் தாக்குப்பிடித்து 44 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். இவரை வருண் சக்ரவர்த்தி வீழ்த்தினார்.

ஹாரி ப்ரூக் 17 ரன்னிலும், லிவிங்ஸ்டன் ரன்ஏதும் எடுக்காமலும் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்தது. கடைசி பந்தில் மார்க் வுட் ரன்அவுட் ஆக இங்கிலாந்து 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

Tags:    

Similar News